குறிஞ்சிப்பாடி அருகே பரபரப்பு தேமுதிக பிரமுகர் சரமாரி வெட்டி படுகொலை

குறிஞ்சிப்பாடி, ஏப். 21: குறிஞ்சிப்பாடி  அருகே தேமுதிக கிளை செயலாளர் மர்ம நபர்களால் சரமாரி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து இச்சம்பவத்தில் ஈடுபட்ட கொலை குற்றவாளிகளை தீவிரமாக தேடிவருகின்றனர். கடலூர் மாவட்டம்  குறிஞ்சிப்பாடி அடுத்த ராசாக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி மகன்  செந்தில்குமார் (39), தேமுதிக கிளை செயலாளர். நேற்று முன்தினம் இரவு  செந்தில்குமார் அப்பகுதியில் உள்ள விவசாய நிலத்தின் மோட்டார் கொட்டகையில் படுத்து தூங்கியுள்ளார். நேற்று காலை அவ்வழியே சென்றவர்கள் பார்த்த போது  செந்தில்குமார் தலையில் வெட்டுக் காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில்  கிடந்தார். இதையடுத்து அப்பகுதி மக்கள் வடலூர் போலீசுக்கு தகவல்  தெரிவித்தனர்.உடனடியாக வடலூர் இன்ஸ்பெக்டர் செந்தாமரை தலைமையிலான  போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உயிருக்கு போராடிய  செந்தில்குமாரை மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு  சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக கடலூர்  அரசு தலைமை மருத்துவமனையிலும், அதனை தொடர்ந்து புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதுகுறித்து செந்தில்குமாரின் அண்ணன் விஜயராகவலு வடலூர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். அதில், தனது தம்பி செந்தில்குமார் நேற்று முன்தினம் வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றார். பின்னர் அங்குள்ள மோட்டார் கொட்டகையிலேயே படுத்து தூங்கினான். மறுநாள் அதிகாலை 3 மணியளவில் இயற்கை உபாதைக்காக நான் வயல் பகுதிக்கு சென்றுவிட்டு திரும்பும் போது செந்தில்குமார் தூங்கிக்கொண்டிருந்ததை பார்த்துவிட்டு வந்துவிட்டேன். இந்நிலையில் மறுநாள் காலையில் அவரது பண்ணை வீட்டில் வேலை செய்யும் முருகேசன் மகன் சங்கர் என்பவர் வயலுக்கு சென்று பார்த்த போது அங்கு செந்தில்குமார் தலையில் வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடப்பதாக தன்னிடம் தெரிவித்தார். ஆகையால் அவர் மீது யாரோ மர்ம நபர்கள் கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். அவர்களை போலீசார் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். போலீசார் வழக்குப்பதிந்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் புதுச்சேரி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செந்தில்குமார் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து போலீசார் இவ்வழக்கை கொலை வழக்காக மாற்றி இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை தீவிரமாக தேடிவருகின்றனர்.

Related Stories: