பேருந்து வசதி இல்லாததால் பயணிகள் சாலை மறியல்

விழுப்புரம், ஏப். 19:  ஓட்டு போடுவதற்கு தங்கள் ஊர்களுக்கு செல்ல போதிய பேருந்துகள் இல்லாததால், விழுப்புரத்தில் பயணிகள் மறியலில் ஈடுபட்டனர். தமிழகத்தில் நேற்று மக்களவை தேர்தல் நடதது. இதையொட்டி நேற்று தமிழகம் முழுவதும் அரசு பொது விடுமுறை அளிக்கப்பட்டது. தனியார் நிறுவன ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.இதனால் நேற்று முன்தினம் இரவு முதல் வெளியூர்களில் தங்கி வேலை செய்பவர்கள் வாக்களிப்பதற்காக சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். சென்னையில் பணிபுரியும் பல்லாயிரக்கணக்கானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பினர். ஆனால் போதிய பேருந்து வசதியை போக்குவரத்து கழகம் ஏற்பாடு செய்யாததால் பல மணிநேரம் காத்திருந்த அவர்கள் சென்னையில் மறியலில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் விழுப்புரம் வரை தற்காலிகமாக பேருந்து வசதிகள் அவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் திருச்சி, மதுரை, நெல்லை செல்லக் கூடியவர்களிடம் விழுப்புரத்தில் இருந்து பேருந்து வசதி உள்ளது என தெரிவித்த நிலையில் அங்கிருந்து புறப்பட்டு விழுப்புரத்திற்கு வந்துள்ளனர்.நேற்று காலை ஒரு மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்த பயணிகள், திருச்சி மார்க்கத்திற்கு ஒரு பேருந்து கூட இயக்கவில்லை. பேருந்துகள் தயார் நிலையில் இருந்தும் டிரைவர், நடத்துனர் இல்லாததால் பேருந்துகள் இயக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் பேருந்து நிலையம் முன்பு திருச்சி-சென்னை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த டிஎஸ்பி திருமால் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதனை ஏற்க மறுத்த அவர்கள் பேருந்து வரும்வரை இங்கிருந்து நகரமாட்டோம் என்று கூறி சாலையில் அமர்ந்து மறியலை தொடர்ந்தனர். அந்த வழியாக விழுப்புரம் ஆர்டிஓ குமாரவேல் வந்த ஜீப்பை முற்றுகையிட்டு போராட்டத்தை தொடர்ந்தனர். இதையடுத்து உடனடியாக போக்குவரத்து கழக அதிகாரிகளை ஆர்டிஓ தொடர்பு கொண்டு திருச்சி, மதுரை மார்க்கத்திற்கு 5 பேருந்துகளை உடனடியாக பஸ் நிலையத்திலிருந்து இயக்க உத்தரவிட்டார். சிறிது நேரத்தில் அடுத்தடுத்து பேருந்துகள் வந்தது. அதில் பயணிகள் முண்டியடித்து ஏறி தங்கள் ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.

Advertising
Advertising

Related Stories: