வாக்குப்பதிவு தாமதமாக தொடங்கியது

விழுப்புரம், ஏப். 19:  விழுப்புரம் மாவட்டத்தில் பல வாக்குச்சாவடிகளில் இயந்திரம் கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தாமதமாக தொடங்கியது.விழுப்புரம் மாவட்டத்தில் மக்களவை தேர்தலையொட்டி 11 சட்டமன்ற தொகுதிகளிலும் 3,227 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. அதில் 4,043 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் கூடுதலாக 25 சதவீதம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் இருப்பு வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில், நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் பல்வேறு வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது.

விழுப்புரம் பூந்தோட்டம் வாக்குச்சாவடியில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் 2 பேர் மட்டுமே வாக்களித்தனர். அடுத்த சில நொடிகளில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டு சத்தம் வரத்தொடங்கியது. உடனடியாக ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு இயந்திரம் சரிசெய்யும் பணி நடந்தது. பின்னர் அரை மணி நேரத்திற்கு பிறகு இயந்திரம் சரிசெய்யப்பட்டு மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியது.இதே போல் கண்டமானடியில் காலை 7.30 மணிக்கு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பழுது ஏற்பட்டது. பின்னர் ஊழியர்கள் சரிசெய்து அரை மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் வாக்குப்பதிவு நடந்தது. சில நிமிடங்களில் மீண்டும் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. ஊழியர்கள் நீண்டநேரமாக சரிசெய்து கொண்டிருந்தனர். இதனால் வெளியே 100க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நீண்ட நேரமாக காத்திருந்து அவதிக்குள்ளானார்கள். பழுதை சரிசெய்ய முடியாத நிலையில் மாற்று இயந்திரம் பயன்படுத்தப்பட்டது.  இதே போல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு காரணமாக வாக்குப்பதிவில் தாமதம் ஏற்பட்டது.

Related Stories: