வீரவநல்லூர், ஏப். 11: கோபாலசமுத்திரத்தில் நெல்லை மக்களவைத் தொகுதி அமமுக வேட்பாளர் மைக்கேல் ராயப்பன் நேற்று தனது பிரசாரத்தை துவங்கினார். அவரை ஆதரித்து அவருடன் முன்னாள் சட்டஅமைச்சர் இசக்கி சுப்பையாவும் திறந்த ஜீப்பில் வீதிவீதியாகச் சென்று வாக்குசேகரித்தனர். வழிநெடுகிலும் இருவருக்கும் கட்சியினர் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து மேலச்செவல் மற்றும் பத்தமடை பகுதியில் வீதி வீதியாக சென்று இருவரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். பின்னர் சேரன்மகாதேவிக்கு வந்த மைக்கேல் ராயப்பன் மற்றும் இசக்கிசுப்பையா இருவரும் சேரன்மகாதேவி பஸ் நிலையம் அருகே தேர்தல் அலுவலத்தை திறந்து வைத்து பேசினர். தொடர்ந்து இருவரும் சேரன்மகாதேவியில் வாக்கு சேகரித்தனர். அப்போது வேட்பாளர் மைக்கேல் ராயப்பன் பேசுகையில், டிடிவி.தினகரன் விரைவில் முதல்வராக பதவியேற்பார் என்றார். தொடர்ந்து இசக்கி சுப்பையா பேசுகையில், ‘‘ஓ.பி.எஸ்சும், இ.பி.எஸ்சும் பதவி சுகத்திற்காக இரட்டை இலையை மோடியிடம் அடகு வைத்தவர்கள். அமமுக வெற்றி பெற்றால் சேரன்மகாதேவியில் முனைசேகரன் குடியிருப்பு, ராமர்கோயில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பாலங்கள் கட்டி மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும்’’ என்றார். தொடர்ந்து கூனியூர், காருகுறிச்சி, புதுக்குடி வழியாக வீரவநல்லூர் சென்று வாக்குசேகரித்தனர். பிரசாரத்தில் பேரூர் செயலாளர் மாரிச்செல்வம், கூட்டுறவு வங்கி தலைவர் முருகன்நயினார், துணைத்தலைவர் மாரிமுத்து, மாவட்டப் பிரதிநிதிகள் பன்னீர்செல்வம், உச்சிமாகாளி மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.