முத்துப்பேட்டை பேரூராட்சி செம்படவன்காடு மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

முத்துப்பேட்டை, ஏப்.11: அடிப்படை வசதிகள் செய்து தராததை கண்டித்து முத்துப்பேட்டை பேரூராட்சி செம்படவன்காடு மக்கள் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக முடிவு செய்துள்ளனர்.முத்துப்பேட்டை பேரூராட்சி 11வது வார்டு மற்றும் 14வது வார்டு செம்படவன்காடு பகுதி பேரூராட்சியில் அடிப்படை வசதிகளில் பின்தங்கிய ஒரு பகுதியாகும். இப்பகுதியில் சமீபத்தில் தாக்கிய கஜா புயலினால் அனைத்து தரப்பு மக்களும் பெரியளவில் பாதிக்கப்பட்டனர். ஆனால் அரசின் நிவாரணம்தான் முறையாக போய் சேரவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் கடும் விரக்தியில் உள்ளனர். அதேபோல் இப்பகுதி மக்களுக்கு அடிப்படையான பல்வேறு கோரிக்கைகளும் உள்ளன. அவைகளை சுட்டிக்காட்டி இப்பகுதி மக்கள் சம்பத்தப்பட்ட அதிகாரிகள் கவனத்திற்கு எடுத்து சென்றும் எந்த பலனுமில்லை. இதனால் சமீபத்தில் ஒன்றுகூடிய இப்பகுதி மக்கள் வர இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.

அதனை சுட்டிக்காட்டி ஆங்காங்கே பிளக்ஸ் போர்டுகளும் வைத்துள்ளனர். அதில் செம்படவன்காடு கிராமத்தில் உள்ள  சமுதாயக்கூடம் மக்களின் பயன்பாட்டுக்கு வர வேண்டும். 50 பேருக்கு இது நாள் வரை புயல் நிவாரணம் கிடைக்கவில்லை. மயான வசதி இல்லை. குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி இல்லை. இது போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும் 11வது வார்டு மற்றும் 14வது வார்டு செம்படவன்காடு  பொதுமக்கள் தேர்தலை புறக்கணிக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த தேர்தல் புறக்கணிப்பால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: