பட்டிவீரன்பட்டி, ஏப்.8: பட்டிவீரன்பட்டி அருகே விவசாய தோட்டங்களுக்குள் காட்டுப்பன்றிகள் நுழைந்து பயிர்களை நாசம் செய்து வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். பட்டிவீரன்பட்டி அருகே தாண்டிக்குடி மலையடிவாரம் இயற்கை எழில்கொஞ்சும் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ளது. இப்பகுதியில் ஆண்டுதோறும் பெய்யக்கூடிய வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவமழை காலங்களில் கிடைக்கும் ஓரளவு தண்ணீரைக் கொண்டு விவசாயம் நடைபெற்று வருகின்றது. மேலும் தற்போது கிணறுகள் வறண்டு விட்டதால் தற்காலிகமாக குழிஅமைத்து அதில் பாலித்தீன் உறைகளால் கிணறுவெட்டி அதில் தண்ணீரை தேக்கி விவசாயம் செய்து வருகிறார்கள். வனப்பகுதியில் தற்போது கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் தண்ணீர், இரை தேடி இந்த விளைநிலங்களுக்குள் காட்டு பன்றிகள் புகுவது தொடர்கதையாகி வருகின்றது. குறிப்பாக இரவு நேரங்களில் புகுந்து எல்லா பயிர்களையும் துவம்சம் செய்கின்றன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். காட்டுப்பன்றிகள் விளைநிலங்களுக்குள் புகுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.