வீரகனூர் அருகே கருப்பு கொடி ஏற்றி 2வது நாளாக தொடரும்

தேர்தல் புறக்கணிப்பு போராட்டம்கெங்கவல்லி, ஏப். 3: வீரகனூர் அருகே, காட்டுகொட்டாய் கிராமத்தில், அடிப்படை வசதி செய்து தரக்கோரி 2வது நாளாக தொடர்ந்து தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கெங்கவல்லி தாலுகா வீரகனூர் பேரூராட்சி, பொன்காளி அம்மன் மேற்கு காட்டு கொட்டாயில், அடிப்படை வசதி செய்து தரக்கோரி பொதுமக்கள் தங்களது வீடுகளில் கருப்புக்கொடி கட்டி தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தை நேற்று முன்தினம் காலை தொடங்கினர்.  தகவலின் பேரில், கிராம நிர்வாக அலுவலர், கிராம வருவாய் ஆய்வாளர் மற்றும் வீரகனூர் பேரூராட்சி செயல் அலுவலர் ஆகியோர் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில், கலந்து கொண்ட பொதுமக்கள், சொக்கனூர் முதல் பொன் காளியம்மன் கோவில் மேற்கு காட்டுக்கொட்டாய் எல்லைவரை தார் சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனை வீரகனூர் பேரூராட்சி செயல் அலுவலர் ஏற்றுக் கொண்டனர்.

இதையடுத்து கருப்புக் கொடிகளை அகற்றிக்கொள்ள கேட்டுக்கொண்ட வருவாய் ஆய்வாளரிடம், தங்களது மீதமுள்ள இரண்டு கோரிக்கைகளையும் நிறைவேற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உத்தரவாதம் கொடுத்தால் மட்டுமே போராட்டத்தில் இருந்து பின்வாங்குவோம் என்று திட்டவட்டமாக தெரிவித்து விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் பேச்சுவார்த்தைக்கு வந்த அரசு அலுவலர்கள் தங்களது மேலதிகாரிகளுக்கு தவறான தகவல்களை தெரிவிப்பதாகவும், அடிப்படை வசதிகள் இல்லாமல் தவித்து வரும் தங்களின் 13 வருட கால கோரிக்கையின் வலியை உணர்த்த போராட்டம் செய்தால், அந்தப் போராட்டத்தின் வலியை உணர்ந்து பேச்சுவார்த்தை நடத்தாமல், ஏதோ சினிமாவில் வருவது போல், யார் யார் கருப்பு கொடி கட்டியது? வீடியோவில் உள்ளவர்கள் எல்லாம் யார்? இன்னும் சற்று நேரத்தில் இங்கே வர வேண்டும், காவல் நிலையத்தில் சொல்லி அனைவரையும் கைது செய்து சென்றுவிடுவேன், என்று மிரட்டும் தொனியில் பேசியதால், தங்களுக்கு அரசு அலுவலர்கள் மீது மேலும் வெறுப்புணர்வு ஏற்பட்டதாகவும் தெரிவித்தனர். நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி 2வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories: