கள்ளக்குறிச்சியில் பரபரப்பு குடிநீர் பிரச்னையை தீர்க்க கோரி காலி குடங்களுடன் சாலை மறியல்

கள்ளக்குறிச்சி, ஏப். 3:     கள்ளக்குறிச்சி நகராட்சி பகுதி 4வது வார்டு காட்டுபுரிதர்கா பகுதியில் 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நகராட்சி நிர்வாகம், தெரு பைப்லைன் மூலம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம் செய்து வந்தனர். கடந்த சில மாதங்களாக அப்பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யாததால் அவதிப்பட்டு வரும் மக்கள், வெகு தூரம் சென்று குடிநீர் எடுத்து வந்து பயன்படுத்தி வருகின்றனர். சிலர் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். குடிநீர் தட்டுப்பாட்டை போக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டி கள்ளக்குறிச்சி நகராட்சி அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தும் நகராட்சி அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்க முன்வராமல் அலட்சியம் காட்டி வருவதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் மற்றும் பொதுமக்கள் நகராட்சி அதிகாரிகளை கண்டித்து காலி குடங்களுடன் கச்சிராயபாளையம் செல்லும் சாலை பகுதியில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது பற்றி தகவல் அறிந்ததும் நகராட்சி பணி ஆய்வாளர் கோபிநாத், கள்ளக்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் பாலமுரளி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் சமாதானம் செய்தனர். அதனை ஏற்க மறுத்து போலீசாரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தி தருவதாக அதிகாரிகள் கூறியதன் பேரில் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Related Stories: