×

வங்கி விழிப்புணர்வு ஏற்படுத்துமா? மோட்டார் மூலம் குடிநீர் திருட்டு தடுக்கா விட்டால் போராட்டம் நிச்சயம்

திருவாடானை, மார்ச் 26: திருவாடானையில் மோட்டார் வைத்து குடிநீர் திருடுவதால் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனம் காட்டி வருவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். கோடைகாலம் துவங்கி விட்டாலே குடிநீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுவது ராமநாதபுரம் மாவட்டத்தில் வாடிக்கையாகி விட்டது. அதிலும் திருவாடானை தாலுகா பகுதியில் தொடர்ந்து கடந்த 3 ஆண்டுகளாக பருவ மழை பொய்த்து போனதால் நீர்நிலைகள் அனைத்தும் வறண்டு விட்டன. இதனால் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. திருவாடானையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க காவிரி குடிநீர் திட்டம் மூலம் ஓரி கோட்டையிலிருந்து பம்பிங் செய்யப்பட்டு மங்களநாதன் குளம் வரை தண்ணீர் வரும். இந்த தண்ணீரை அங்கிருந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு ஏற்றி திருவாடானை பஸ் ஸ்டாண்ட் பகுதி வடக்கு ரத வீதி, தெற்கு ரத வீதி, மேலரத வீதி, கீழரத வீதி, ஓரியூர் விலக்கு சாலை போன்ற பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த பகுதிகளுக்கு உள்ளூர் குடிநீர் திட்டம் மூலம் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டு தண்ணீர் வினியோகிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் உள்ளூர் குடிநீர் திட்டம் சரிவர இயங்காத நிலையில் காவிரி குடிநீர் இதே குழாய் இணைப்பு மூலம் வழங்கப்பட்டு வந்தது. இதில் பல வீடுகளில் சட்டவிரோதமாக வீட்டிற்குள் இருக்கும் குடிநீர் குழாயில் மின் மோட்டார் பொருத்தி காவிரி தண்ணீரை உறிஞ்சி எடுத்து விடுகின்றனர். இதனால் பல வீடுகளுக்கு தண்ணீர் செல்வதே இல்லை. மின் மோட்டாரை பயன்படுத்தி தண்ணீரை திருடுவதால் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘உள்ளூர் திட்டத்துக்காக வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது. அதே இணைப்பில் காவிரி குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இரண்டு நாட்களுக்கு ஒருமுறை ஒவ்வொரு தெருவாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த குடிதண்ணீரை பல வீடுகளில் மின் மோட்டார் வைத்து திருடுகின்றனர். இதனால் மற்றவர்களுக்கு குடிதண்ணீர் கிடைக்காமல் பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய அலுவலர்களிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனம் காட்டி வருகின்றனர். இந்த நிலை தொடருமானால் போராட்டம் நடத்துவதைத் தவிர வேறு வழி இல்லை’ என்றனர்.

Tags : Bank ,theft ,
× RELATED ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகள் எதிரொலி:...