×

ஆதரவற்ற முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு தங்கும் விடுதி அமைக்க வலியுறுத்தல்

ராமநாதபுரம், மார்ச் 22: ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆதரவற்ற முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு தங்கும் விடுதி அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆதரவற்ற முதியோர், மாற்றுதிறனாளிகள், மனநலம் பாதிக்கப்பட்டோர் சுமார் 20 ஆயிரம் பேர் உள்ளனர். மாவட்ட மறுவாழ்வு நலத்துறை சார்பில் பதிவு செய்யப்பட்டுள்ள இவர்களுக்கு அடையாள அட்டை, மாதம் தோறும் உதவித்தொகை அரசு சார்பில் வழங்கப்படுகிறது. ராமேஸ்வரம், பரமக்குடி, மண்டபம் உள்ளிட்ட 11 ஊராட்சிகளில் தனியார் தொண்டு நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மனநலம் குன்றியோர் காப்பகங்கள் அமைக்கப்பட்டுள்னன. ஏர்வாடியில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. அங்கு மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களால் ஈடுபடக்கூடிய தொழிற்பயிற்சி சிலருக்கு அளிக்கப்பட்டாலும். அரசு சார்பில் தங்கும் வசதியுடன் கூடிய தொழிற்பயிற்சி காப்பகம், முதியோர், மாற்றுத்திறனாளிகள் தங்கும் விடுதி இதுவரை மாவட்டத்தில் அமைக்கப்படாமல் உள்ளது. 40 வயதுக்கு மேற்பட்ட வயது முதிர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு தங்கும் விடுதிகள் இங்கு இல்லாதது வேதனையானது. ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ரயில்கள் மூலமாக ராமேஸ்வரம் வரும் மனநோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. மொழி புரியாமல் அரைகுறை ஆடையுடன் அவர்கள் ராமேஸ்வரம், ஏர்வாடி, ராமநாதபுரம் என மாவட்டத்தின் பல இடங்களில் சுற்றித்திரிகின்றனர். இரக்க மணம் படைத்த சுற்றுலா பயணிகள், பக்தர்கள் இவர்களை நிலையை கருதி அவர்களுக்கு தங்களால் முடிந்த உணவு பொட்டலங்களை வாங்கி கொடுத்துவிட்டு ஆத்ம திருப்தியடைந்து செல்கின்றனர். அரசு சார்பில் மாவட்டத்தில் முதியோர் மையம் ஏற்படுத்துவதுடன் அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவி, பராமரிப்புகளை செயல்படுத்துவதற்கும், மனநலம் பாதித்தவர்களுக்கு மருத்துவவசதி, பாதுகாப்பு, பராமரிப்பு செய்யும் வகையில் ராமேஸ்வரம், ஏர்வாடி போன்ற பகுதிகளில் அமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர் மனோகரன் கூறுகையில், ‘மாவட்டத்தில் நாளுக்குநாள் மனநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஏர்வாடியில் மனநோயாளிகளை பாதுகாப்பதற்காக அரசு மருத்துவமனை கட்டியுள்ளது. இருப்பினும் அங்கு முறையான பராமரிப்பு இல்லை. இதுதவிர ஆதரவற்ற முதியோர்களை பாதுகாக்க தனியார் பராமரிப்பு முகாம்களே உள்ளன. அங்கும் அவர்கள் சரிவர கவணிக்கப்படுவது கிடையாது. தற்போது தேர்தல் நேரம் என்பதால் ராமநாதபுரம் தொகுதியில் வெற்றிபெறும் வேட்பாளர் மாவட்டத்தில் முதியோர் மையம் ஏற்படுத்தி அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவி, பராமரிப்புகளை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Tags : government accommodation hotel ,persons ,
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...