விழுப்புரம், மார்ச் 22: விழுப்புரம், கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதியில் போட்டியிட தலா ஒரு சுயேட்சை வேட்பாளர் நேற்று மனுதாக்கல் செய்தார். இதுவரை அரசியல் கட்சியினர் யாரும் மனுதாக்கல் செய்யவில்லை. தமிழகம், புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19ம் தேதி தொடங்கியது. வரும் 26ம் தேதி முடிவடைகிறது. 27ம் தேதி மனுக்கள் பரிசீலனையும், 29ம் தேதி இறுதி வேட்பாளர்கள் பட்டியலும் வெளியிடப்பட உள்ளது. விழுப்புரம் மக்களவை(தனி) தொகுதியில் கடந்த இரண்டு நாட்களாக வேட்புமனு தாக்கல் செய்ய யாரும் வரவில்லை. நேற்று சுயேட்சை வேட்பாளர் ஒருவர் மட்டுமே மனுதாக்கல் செய்தார். வானூர் அருகே தைலாபுரத்தை சேர்ந்த அகில இந்திய மக்கள் கழக மாவட்ட தலைவர் ராஜா என்பவர் நேற்று விழுப்புரம் மக்களவை தொகுதியில் போட்டியிட தேர்தல் நடத்தும் அலுவலரான ஆட்சியர் சுப்ரமணியனிடம் ரூ.12,500 டெபாசிட் செலுத்தி வேட்புமனுவை தாக்கல் செய்தார். இவருக்கு 10 பேர் முன்மொழிந்தனர். நாளை, நாளை மறுதினம் விடுமுறை. இதனிடையே இன்று காலை விழுப்புரம் தொகுதியில் பாமக வேட்பாளர் வடிவேல்ராவணன் வேட்புமனு தாக்கல் செய்கிறார். பிற்பகல் கள்ளக்குறிச்சி தொகுதியில் தேமுதிக வேட்பாளர் சுதீஷ் வேட்புமனுவை தாக்கல் செய்கிறார். 25ம் தேதி விழுப்புரம் தொகுதி திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் ரவிக்குமார் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.