×

தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை டாஸ்மாக் கடைகளில் ஒட்டுமொத்தமாக மதுபானம் விற்க தடை அதிகாரிகள் கண்காணிப்பு தீவிரம்

திருவண்ணாமலை, மார்ச் 22: டாஸ்மாக் மதுக்கடைகளில் ஒட்டுமொத்தமாக மதுபானங்களை விற்பனை செய்யக்கூடாது என விற்பனையாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள், மதுக்கடைகளை சோதனை நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 28 நாட்களே உள்ள நிலையில், வேட்புமனு தாக்கல், தேர்தல் பிரசார கூட்டம், வாக்கு சேகரிப்பு என தேர்தல் களம் அனல் பறக்கிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் எனும் பெயரில், தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. மேலும், தேர்தல் பிரசாரத்தின்போது பிரச்னைகள், தகராறுகள், மோதல்கள் உருவாகாமல் கண்காணிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும், பதற்றமான பகுதிகள், வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு, அங்கு கூடுதல் கண்காணிப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், சட்டம் ஒழுங்கு பிரச்னைகளுக்கு முக்கிய காரணமாக அமையும் மதுபான விற்பனையை கட்டுப்படுத்துவதில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். எனவே, மதுபானம் அதிகமாக விற்பனையாகும் டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ள பகுதியை, பதற்றமான பகுதி என போலீசார் முடிவு செய்துள்ளனர். எனவே, மதுபானம் அதிகம் விற்கும் கடைகளின் மீதும் போலீசாரின் ரகசிய கண்காணிப்ப தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், மது பாட்டில்களை ஒட்டுமொத்தமாக வாங்கி வைத்துக்கொண்டு, தேர்தல் பிரசாரம் மற்றும் வாக்குப்பதிவு நேரத்தில் விநியோகம் செய்ய வாய்ப்புள்ளது என போலீசார் சந்தேகிக்கின்றனர். எனவே, ஒட்டுமொத்தமாக மதுபான பாட்டில்களை விற்பனை செய்யக்கூடாது என டாஸ்மாக் விற்பனையாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், ஒட்டுமொத்தமாக மதுபாட்டில்களை வாங்கும் நபர்கள் குறித்து, உடனடியாக சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். அதேபோல், புதுச்சேரி மற்றும் கர்நாடக மாநிலம் போன்ற இடங்களில் இருந்து வெளிமாநில மதுபாட்டில்கள் கடத்திவரப்படுகிறதா என வாகன தணிக்கை செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags : Election ,Surveillance Officers Surveillance Officers ,Target ,
× RELATED நகர்புறங்களில் வசிக்கும் மக்கள்...