×

தேவிபட்டிணம் கிராமத்தில் அங்கன்வாடியை சுற்றிலும் குப்பைகள்

ராமநாதபுரம், மார்ச் 21: தேவிபட்டிணம் கிராமத்தில் உள்ள குழந்தைகள் அங்கன்வாடி மையங்களை சுற்றிலும் குப்பைகள் குவிக்கப்படுவதால், குழந்தைகளுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுதவிர இரவு நேரங்களில் பலர் மது அருந்தும் பாராக மாற்றி வருகின்றனர்.  ராமநாதபுரம் அருகே தேவிபட்டிணத்தில் பஸ் ஸ்டாண்டு அருகேயும், மீன் கடை பகுதியிலும் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. அப்பகுதியில் உள்ள 25க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். அங்கன்வாடி மையங்களுக்கு அருகில் குப்பைகள் கொட்ட கூடாது என போர்டு வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அப்பகுதி பொதுமக்கள் பலர் அங்கன்வாடி மையங்களை சுற்றிலும் குப்பைகளை கொட்டி வருகின்றனர்.
இதனால் அங்கு படிக்கும் குழந்தைகள் பல்வேறு தொல்லைகளுக்கு ஆளாகின்றனர். கடந்த பல மாதங்களாக இந்த குப்பைகள் சுத்தம் செய்யப்படாமல் உள்ளதால் மையத்தை சுற்றிலும் துர்நாற்றம் வீசுகிறது. ஊராட்சி நிர்வாகத்தினர் குழந்தைகளின் நலன் கருதி குப்பைகளை அகற்றவும், தொடர்ந்து அப்பகுதியில் குப்பைகள் சேராமல் இருக்க நடவடிக்கை எடுக்கவும் குழந்தைகளின் பெற்றோர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

அப்பகுதியை சேர்ந்த செய்யது முகமது கூறுகையில், குழந்தைகள் மையத்தை சுற்றிலும் குப்பைகள் நிறைந்துள்ளதால், பெற்றோர்கள் குழந்தைகளை மையத்திற்கு அனுப்ப தயக்கம் காட்டி வருகின்றனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அதிகாரிகள் இதை ஆய்வு செய்தனர். இருப்பினும் தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதனால் அங்கு செல்லும் குழந்தைகளுக்கு தொற்றுநோய் பரவி வருகிறது. அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். கமருதீன் கூறுகையில்,அங்கன்வாடி மையத்தை குடிமகன்கள் பாராக மாற்றி வருகின்றனர். இரவு நேரங்களில் அங்கு வரும் அவர்கள் குடித்து விட்டு மதுபாட்டில், எச்சில் இலை போன்றவற்றை அங்கேயே விட்டு செல்கின்றனர். இதனால் தினந்தோறும் வளாகம் முழுவதும் மதுப்பாட்டிகள் நிறைந்து வருகிறது. இதனால் காலையில் அங்கன்வாடி மையத்துக்கு வரும் உதவியாளர்கள் கடும் அதிருப்திக்கு உள்ளாகின்றனர் என்றார்.

Tags : village ,Anganwadi ,
× RELATED கடலூர் அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை...