×

தில்லைநாச்சி அம்மன் கோயிலில் அசுத்தமாகும் தீர்த்தகுளம்: வேதனையில் பக்தர்கள்

ராமநாதபுரம், மார்ச் 21: சுந்தரமுடையான் தில்லைநாச்சி அம்மன் தீர்த்தகுளத்தில் சுற்றுச்சுவர் பணிகள் முழுவதுமாக முடிவடையாததால், மழைநீர் வீணாகி அசுத்தமாகி வருகிறது. விரைவில் குளத்தை சுத்தம் செய்து முழுவதுமாக சுற்றுச்சுவர் கட்ட பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.  மண்டபம் யூனியன் பகுதியில் மழை காலத்தில் மழைநீரை சேமித்து வைக்கும் வசதிகள் இல்லாமல் இருந்தது.  இதையடுத்து மழைநீரை சேமிப்பதற்காக அப்பகுதி ஊராட்சிகளில் உள்ள குளங்களை சீரமைக்கும் பணிகள் மழை காலத்திற்கு முன்பே தொடங்கப்பட்டன.  மண்டபம் யூனியன் அதிகாரிகள் குளங்களை சீரமைக்கும் பணிகளுக்காக முழுத்தொகையும் ஒதுக்காமல் ஒரு குறிப்பிட்ட தொகையை மட்டும் ஒதுக்குகின்றனர்.
இதனால் அப்பணியை எடுக்கும் ஒப்பந்தக்காரர்கள் சம்மந்தப்பட்ட பணியை முழுவதுமாக முடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

உச்சிப்புளி அருகே சாத்தக்கோன்வலசை ஊராட்சி சுந்தரமுடையான் கிராமத்தில் தில்லை நாச்சியம்மன் கோவில் உள்ளது.  கோவிலுக்கு எதிரே தீர்த்தக்கரை குளம் உள்ளது. கோவிலுக்கு வருபவர்கள் தீர்த்தகரையில் குளித்து அம்மனுக்கு பூஜை செய்வது வழக்கம்.  தீர்த்தக்கரை குளத்தில் மழைநீரை சேமிப்பதற்காக கட்டப்பட்ட சுற்றுச்சுவர்கள் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கடந்த வருடம் பெய்த மழைநீர் முழுவதும் வழக்கம்போல் வீணாகி விட்டது. தற்போது குளம் முழுவதும் அல்லி பூக்கள், நாணல்கள் மற்றும் குப்பைகளால் நிறைந்துள்ளது.  இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் படித்துறை வசதி இருந்தும் குளத்தில் நீராட முடியாமல் உள்ளது. அப்பகுதியை சேர்ந்த முருகன் கூறுகையில், நல்ல திட்டங்கள் அரசு அதிகாரிகளின் அணுகு முறையால் பலன் இல்லாமல் போய் விடுகிறது.  இத்திட்டத்திற்கு அதிகாரிகள் முழுத்தொகையும் ஒதுக்கீடு செய்திருந்தால் கடந்த வருடம் பெய்த மழைநீர் முழுவதையும் சேமித்திருக்கலாம்.  இருப்பினும் இதுநாள்வரை சுற்றுச்சுவர் பணிகள் முடிவடையாமல் உள்ளது.  விரைவில் தீர்த்தகுளத்தை முறையாக தூர்வாரி சுற்றுச்சுவர் பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

Tags : Tharinakanni Amman ,devotees ,
× RELATED திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி...