சூளகிரி அருகே பட்டா கேட்டு கருப்பு கொடி ஏந்தி போராட்டம்

சூளகிரி, மார்ச் 19: சூளகிரி அருகே, பட்டா கேட்டு கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள், உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அறிவித்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா, பெத்தசிகரலப்பள்ளி ஊராட்சி கொட்டாயூர் கிராமத்தில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள், கடந்த 80 ஆண்டுக்கும் மேலாக வனப்பகுதியில் வீடுகள் கட்டி வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதிக்கு அரசு சார்பில் தார்சாலை, நடுநிலைப்பள்ளி, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, குடிநீர் மற்றும் பேருந்து வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், குடும்ப அட்டை, ஆதார், வாக்காளர் அட்டையும் உள்ளது. ஆனால், இவர்களுக்கு வீட்டுமனை பட்டா மட்டும் வழங்கப்படவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், நேற்று முன்தினம், கொட்டாயூர் பகுதி மக்கள், கருப்பு கொடிகளுடன் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பட்டா வழங்காவிட்டால் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘எங்கள் கிராமத்தில் குடிநீர், சாலை, பள்ளி என அனைத்து வசதியும் உள்ளது. ஆனால், வனப்பகுதியில் உள்ள எங்கள் வீடுகளுக்கு இதுவரை பட்டா வழங்கப்படவில்லை. பட்டா கேட்டு பலமுறை மனு அளித்தும் பயனில்லை. தேர்தல் காலங்களில், பட்டா பெற்று தருவதாக உறுதி அளித்து வாக்கு சேகரிக்கின்றனர். ஆனால், ஆண்டுகள் கடந்தும் இதுவரை யாரும் கண்டுகொள்ளவில்லை. எனவே, உடனடியாக பட்டா வழங்க நடவடிக்கை எடுக்காவிட்டால், நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்போம்,’ என்றனர்.

Related Stories: