×

தேர்தல் பணி செய்யும் போலீசாருக்கு பயிற்சி

ராமநாதபுரம், மார்ச் 19: நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டு ஒரு வாரமாக தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் உள்ளது. மாவட்டத்திலுள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பணிகளுக்காக மொத்தம் 123 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் பணி செய்யும் அனைத்து துறையினருக்கும் தேவையான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் தேர்தல் பணி செய்யும் காவல்துறை அலுவலர்களுக்கு நடைமுறை விதிகள் பற்றிய பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியை துவக்கி வைத்து கலெக்டர் பேசுகையில், ‘‘காவல்துறை அலுவலர்கள் தேர்தல் நன்னடத்தை விதிமீறல்கள் குறித்து தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, எவ்வித பாரபட்டமுமின்றி நடுநிலையாக செயல்பட வேண்டும். பதற்றமான வாக்குச்சாவடிகள்,  பதற்றமான பகுதிகள் குறித்து முறையே ஆய்வு செய்து தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ள சுவிதா, சீ-விஜில்  போன்ற ஆப்களின்  செயல்பாடுகள் குறித்து முழுமையாக தெரிந்து கொண்டு, அவற்றின் மூலம் பெறப்படும் மனுக்கள், புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள் தேர்தல் பணிச்சான்று பெற்று தபால் வாக்குப்பதிவுச்சீட்டு மூலம் தவறாமல் தங்களது வாக்குகளை பதிவு செய்திட வேண்டும். அந்தவகையில், தேர்தல் நடவடிக்கைகளில் காவல்துறை அலுவலர்கள் அனைவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணிகளின் முக்கியத்துவம் உணர்ந்து விழிப்புடன் பணியாற்றிட வேண்டும்’’ என்று தெரிவித்தார். தொடர்ந்து காவலர்களுக்கு வாக்காளர் விழிப்புணர்வு போஸ்டர்களை வழங்கப்பட்டது. இப்பயிற்சியில் கூடுதல் தேர்தல் அலுவலர் டிஆர்ஓ முத்துமாரி, ஏடிஎஸ்பி தங்கவேல், உதவி தேர்தல் அலுவலர்கள் ஆர்டிஓ சுமன், மாவட்ட அளவிலான டிஎஸ்பிக்கள், போலீசார்,  அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை