கெங்கவல்லி அருகே பள்ளத்தில் டூவீலர் விழுந்து ஏட்டு பலி

கெங்கவல்லி, மார்ச் 12: கெங்கவல்லி  அடுத்த வீரகனூர் இலுப்பநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் ராமு(50). இவரது மகன் மாரிமுத்து(28). இவர் சேலம் நகரில் போலீசாக பணியாற்றி வருகிறார். கடந்த 5ம் தேதி மாரிமுத்துவின் பாட்டி மூக்காயி(70) இறந்துவிட்டார்.

மறுநாள் (6ம் தேதி) மாரிமுத்துவின் தந்தை ராமு இறந்து விட்டார். இந்த துக்க நிகழ்ச்சிக்காக, விடுப்பு எடுத்து மாரிமுத்து வீட்டில் இருந்தார். கடந்த வெள்ளிக்கிழமை இறுதி சடங்குகள் முடிந்தது. இதையடுத்து நாளை (இன்று) பணியில் சேர மாரிமுத்து முடிவு செய்திருந்தார். இந்நிலையில், நேற்று இரவு தெடாவூரில் உள்ள நண்பரை பார்க்க டூவீலரில் சென்றார். பின்னர் இரவு 10 அளவில், மீண்டும் இலுப்பநத்தத்துக்கு திரும்பினார்.தெடாவூர் பள்ளக்காடு பகுதியில் சென்ற போது, திடீரென பள்ளத்தில் சறுக்கி விழுந்த மாரிமுத்து, தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் கெங்கவல்லி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். எஸ்ஐ கோபி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மாரிமுத்துவின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு ஆத்தூர் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர். விபத்தில் இறந்த மாரிமுத்துவுக்கு இன்னமும் திருமணமாகவில்லை. இவரது அண்ணன் சபாபதி, ஐதராபாத்தில் ராணுவ முகாமில் பணியாற்றி வருகிறார்.

Related Stories: