அரசு போக்குவரத்து கழக பணிமனை மேலாளரை கண்டித்து தொமுசவினர் தர்ணா போராட்டம்

கள்ளக்குறிச்சி, மார்ச் 6:     விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக மண்டலத்தில், 13 கிளை போக்குவரத்து கழகங்கள் அமைந்துள்ளன. அந்த போக்குவரத்து கழகத்தில் முறைப்படி தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து ஒவ்வொரு பணிமனைக்கும் தேர்வு செய்யப்பட்ட தொமுச நிர்வாகிகள் நேரடியாக சென்று ஓட்டுநர் மற்றும் நடத்துனர் ஆகியோர்களிடம் குறைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்து அந்த புகார்களை உடனே கிளை மேலாளர் மூலம் நிவர்த்தி செய்யும் விதமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி நேற்று கள்ளக்குறிச்சி அரசு போக்குவரத்து பணிமனைக்கு தொமுச தலைவர் ஞானசேகரன் தலைமையில் பொதுசெயலாளர் பிரபா தண்டபாணி, பொருளாளர் ஞானபோஸ்கோ ஆகியோர் நேரடியாக சென்று, அங்கு பணியில் இருந்த ஓட்டுநர்கள், நடத்துனர்கள் மற்றும் ஊழியர்களிடம் குறைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தனர்.

அப்போது அங்கு பணியில் இருந்த தொழிலாளர்கள் கூறுகையில், பணிமனையில் உள்ள திறந்தவெளி கிணற்றில் கழிவுநீர் கலக்கிறது. இதனால் தண்ணீர் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனால் கிணற்றில் உள்ள தண்ணீர் மூலம் பஸ் கழுவுகின்றபோது கை காலுக்கு பாதிப்பு ஏற்படுவதாக புகார் தெரிவித்தனர். மேலும் ஊழியர்கள் குளிப்பதற்கு தண்ணீர் வசதி இல்லை. ஏற்கனவே பணிபுரிந்து வரும் பேருந்தில் இருந்து மாற்று பேருந்து பணிக்கு செல்ல அதிகாரிகள் கட்டாய வசூல் செய்கின்றனர். எனவே, தொழிலாளர்களுக்கு இந்த பணிமனையில் எந்த அடிப்படை வசதியும் இல்லை. இவைகளை நிவர்த்தி செய்து கொடுக்க வேண்டும் என நிர்வாகிகளிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.  இதையடுத்து தொமுச நிர்வாகிகள் கள்ளக்குறிச்சி போக்குவரத்து பணிமனை கிளை மேலாளர் மஞ்சுநாதனிடம் முறையிட சென்றபோது, நிர்வாகிகளிடம் தரைக்குறைவாக பேசியும், உதாசீனப்படுத்தியும் வெளியேற்றியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த தொமுச தலைவர் ஞானசேகரன் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் 25க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கள்ளக்குறிச்சி போக்கு வரத்து பணிமனை நுழைவுவாயில் முன் முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பணிமனையில் இருந்து பேருந்துகள் உள்ளே, வெளியே செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது பற்றி தகவல் அறிந்ததும் கள்ளக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. கிளை மேலாளர் நேரில் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கிளை மேலாளர் மஞ்சுநாதன், போராட்டத்தில் ஈடுபட்ட தொமுச நிர்வாகிகளிடம் நேரடியாக சென்று மன்னிப்பு கேட்டார். இதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு தொமுச நிர்வாகிகள் கலைந்து சென்றனர். கிளை மேலாளரை கண்டித்து தொமுச நிர்வாகிகள் நடத்திய போராட்டத்தால் அப்பகுதியில் அரை மணி நேரம் பரபரப்பு நிலவியது.

Related Stories: