ஈரோடு, பிப். 27: ஈரோட்டில் கீழ்பவானி விவசாயிகள் நலச்சங்க ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. தலைவர் நல்லசாமி தலைமை வகித்தார். செயலாளர்கள் கனகராஜ், சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தின் முடிவில் நல்லசாமி கூறியதாவது: தமிழகத்தில் கடந்த 2014ம் ஆண்டுக்கு பிறகு பால் கொள்முதல் விலையை அரசு அதிகரிக்கவில்லை. ரூ.900க்கு இருந்த கால்நடை தீவனம் 600 ரூபாய் விலை உயர்ந்து தற்போது ரூ.1,500க்கு விற்பனையாகிறது.பால் உற்பத்தி செலவு கடந்த 5 ஆண்டுகளில் 80 சதவீதம் கூடி விட்டது. பசும்பால் கொள்முதல் விலை ரூ.40 ஆகவும், எருமை பால் கொள்முதல் விலை ரூ.50 ஆகவும் உயர்த்தி கொடுக்க அரசு முன்வர வேண்டும். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பால் பவுடரை தடை செய்ய வேண்டும். பாலில் 69 சதவீதம் வரை கலப்படம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.இதனால், நோயாளிகள் எண்ணிக்கையும், மருத்துவமனைகள், மருந்தகங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதைக்கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் இன்று (27ம் தேதி) சித்தோடு ஆவின் ஒன்றியத்தில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில், கீழ் பவானி விவசாயிகள் சங்கமும் பங்கேற்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.