×

பராமரிப்பு இல்லாத விளையாட்டு மைதானம்

ராமநாதபுரம், பிப். 21: கே.வலசை கிராமத்தில் உள்ள விளையாட்டு மைதானம் பராமரிப்பு இல்லாமல் உள்ளதால் சிறுவர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். தமிழக அரசு கிராம பகுதியில் மாணவர்களிடையே விளையாட்டுகளை ஊக்குவிக்க அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்து பராமரிப்பு பணிகள் செய்து வருகிறது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு பள்ளி விடுமுறை காலங்களில் உறவினர்களின் வீடுகளுக்குச் சென்று அங்கு விடுமுறையை பள்ளி மாணவர்கள் கழித்து வந்தனர். காலமாற்றம், படிப்பில் திறன்களை அதிகரித்தல் காரணமாக தற்போது பெற்றோர்கள் விடுமுறை காலங்களில் கூட மாணவர்களை எங்கும் அனுப்புவது கிடையாது. அதற்கு பதிலாக மாணவர்கள் செல்லவிருக்கும் புதிய வகுப்புகளின் பாடங்கள், கம்ப்யூட்டர், கராத்தே, சிலம்பாட்டம் என கோடை கால பயிற்சிகளை அளிக்க ஏற்பாடுகள் செய்கின்றனர். இதனால் விடுமுறை காலங்களையும் மாணவர்கள் படிப்பிற்காக செலவழிக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் மாணவர்களிடையே சிறிதளவு இருக்கும் விளையாட்டு திறன்கூட பராமரிப்பு இல்லாத விளையாட்டு மைதானங்களால் குறைந்து வருகிறது. போகலூர் அருகே கே.வலசை கிராமத்தில் உள்ள விளையாட்டு மைதானம் பராமரிப்பு இல்லாமல் செடிகொடிகள் வளர்ந்துள்ளன. இதனால் கிராமத்தில் உள்ள மாணவர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். ஊராட்சி நிர்வாகத்தினர் விளையாட்டு மைதானத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் பலர் வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் கூறுகையில், ‘பராமரிப்பு இல்லாததால் விளையாட்டு மைதானத்திற்கு மாணவ, மாணவிகள் வருகை குறைந்து வருகிறது. இதனால் நாளடைவில் மாணவர்களுக்கு விளையாட்டின் மீது உள்ள ஆர்வமே குறைந்து விடும். விரைவில் இதை சரிசெய்து மாணவர்கள் விளையாட்டு மைதானத்தை பயன்படுத்த ஊராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Tags : Careless Playground ,
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை