×

கண்மாயில் மணல் கொள்ளை குவாரியை முற்றுகையிட்ட கிராம மக்கள்

சாயல்குடி, பிப். 21: கடலாடி அருகே பூலாங்குளம் கண்மாய் உள்வாயில் பகுதியில் விதிமுறைகளை மீறி மணல் கொள்ளை நடந்து வருவதால், அனுமதியை ரத்து செய்ய வேண்டும் எனக்கோரி விவசாயிகள், பொதுமக்கள் குவாரியை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலாடி அருகே பி.கீரந்தை வருவாய் கிராம பகுதியிலுள்ள கண்மாய், விவசாய நிலங்களில் சுமார் 200 ஏக்கருக்கு மேல் நிலங்களில் சுமார் 5 அடி ஆளத்திற்கு கீழ் ஆற்றுமணலை போன்ற கட்டுமானத்திற்கு ஏற்ற மணல் வளம் உள்ளது. இதனால் இப்பகுதி கண்மாயில் சிலர் தொடர் மணல் திருட்டில் ஈடுபட்டு வந்தனர். இதனை பரமக்குடி சப்-கலெக்டர் விஷ்ணுசந்திரன் ஆய்வு செய்து தடுத்து நிறுத்தினார். இந்நிலையில் தற்போது பூலாங்குளம் கண்மாய் உள் பகுதியில் விவசாய நிலத்தை சீரமைத்து சவட்டு மண் அள்ளிக்கொள்ளுதல் என்ற பெயரில் தனியார் ஒருவருக்கு வருவாய்த்துறை, கனிமவளத்துறை சிபாரிசின் அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது.

இந்த அனுமதியை தவறுதலாக பயன்படுத்தி, விதிமுறைகளை மீறி வியாபார நோக்கத்தில் மணல் கொள்ளை நடந்து வருகிறது, சுமார் 50 அடி ஆளத்திற்கு மேல் மணல் அள்ளப்படுவதாலும், நூற்றுக்கணக்கான வாகனங்கள் வந்து செல்வதாலும், விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகிறது, வறட்சி ஏற்பட்டு குடிநீர் ஆதாரங்கள் வறண்டு கிடக்கும் நிலையில், ஆழமாக வெட்டி, மணல் எடுப்பதால் குடிநீர் ஆதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே தற்காலிக அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என இப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால் அரசு அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் விவசாயிகள், கிராம மக்கள் குவாரிக்கு நேரில் சென்று வாகனங்களை சிறை பிடித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் போராட்டக் காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தற்காலிகமாக குவாரியை நிறுத்தினர். பிறகு அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் பரமக்குடி உதவி கலெக்டர் விஷ்ணுசந்திரனிடம் புகார் மனு அளித்தனர்.

இதுகுறித்து பூலாங்குளம் கிராம செயலாளர் சாமுவேல்ராஜா, இளைஞர் சங்கத்தலைவர் சுரேஷ் ஆகியோர் கூறும்போது, ‘விதிமுறைகளை மீறி சுமார் 60 அடி ஆளத்திற்கு கீழ் மணல் அள்ளப்பட்டு நூற்றுக்கணக்கான லாரிகளில் இரவு, பகலாக விற்பனை செய்து வருகின்றனர். இதனால் அரசிற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது, அதிக பாரங்களுடன் லாரிகள் வந்து செல்வதால் விவசாயநிலங்கள் பாதிக்கப்பட்டு வருவதால், வருங்காலங்களில் விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளது. ஏற்கனவே வறட்சியால் விவசாயம் பாதிக்கப்பட்ட நிலையில் விவசாயத்திற்காக அமைக்கப்பட்டுள்ள கிணறுகள், ஆழ்துளைகிணறுகளில் தண்ணீர் வறண்டு போகும் அபாயம் உள்ளது. இந்த குவாரிக்கு அனுமதியளிக்கக் கூடாது என கூறி பிப்.2ல் கலெக்டர் அலுவலகத்தில் பி.கீரந்தை, பூலாங்குளம், புத்தனேந்தல், தத்தங்குடி கிராமமக்கள் சார்பாக புகார் மனு அளித்தோம். ஆனால் அனுமதியை ரத்து செய்யாமல், அரசு அதிகாரிகள் உடந்தையாக இருந்து கொண்டு, மணல் குவாரியை நடத்தி வருகின்றனர். எனவே சவட்டு மண் அள்ளிக்கொள்ள வழங்கப்பட்ட அனுமதியை கலெக்டர். பரமக்குடி சப்-கலெக்டர் ரத்து செய்ய வேண்டும்’ என்றனர்.

Tags : village ,
× RELATED கடலூர் அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை...