மின்வாரிய பணிகளுக்கு லஞ்சம்

சிவகங்கை, பிப்.14: காளையார்கோவில் துணை மின் நிலைய கட்டுப்பாட்டில் உள்ள ஊர்களில் மின் வாரியம் தொடர்பான பணிகளுக்கு அதிகப்படியான பணம் வசூல் செய்வதாக புகார் எழுந்துள்ளது.காளையார்கோவில் துணை மின் நிலைய கட்டுப்பாட்டில் நாட்டரசன்கோட்டை பேரூராட்சி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதி கிராமத்தினர் நாட்டரசன்கோட்டை பிரிவு அலுவலகம், காளையார்கோவில் மின்வாரிய அலுவலகங்களிலேயே மின்வாரியம் தொடர்பான அனைத்து பணிகளுக்கும் செல்ல வேண்டும். புதிய வீடுகளுக்கு தற்காலிக மின் இணைப்புகள் பெறுவது, அதை மீண்டும் நிரந்தர மின் இணைப்பாக மாற்றுவது, மீட்டரை இடமாற்றம் செய்வது, மின் கம்பத்தில் வரும் வயர் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் பழுதடைந்தால் மாற்றுவது உள்ளிட்டவற்றிற்க்கு மின்வாரிய அலுவலகத்தில் பணம் செலுத்தி அதன் அடிப்படையில் மின்வாரிய ஊழியர்கள்(போர்மேன், லைன் மேன்) பணி செய்ய வேண்டும்.

ஆனால் காளையார்கோவில் துணை மின் நிலைய கட்டுப்பாட்டில் இயங்கி வரும் காளையார்கோவில் மின்வாரிய அலுவலகம், நாட்டரசன்கோட்டை பிரிவு அலுவலகம் உள்ளிட்டவற்றில் பணிபுரியும் ஊழியர்கள் அரசு நிர்ணயித்த கட்டணம் தவிர ஒவ்வொரு பணிக்கும் தாங்களாக ஒரு குறிப்பிட்ட பணம் லஞ்சமாக நிர்ணயம் செய்கின்றனர். அதை கொடுத்தால் மட்டுமே வந்து பணி செய்வது, இல்லையெனில் ஏதேனும் காரணம் கூறி தாமதப்படுத்துவது அல்லது அலுவலர்களிடம் தவறான காரணங்களை கூறி அப்பணியை நிறுத்தி வைப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகின்றனர்.கட்டுமானப்பணிகள் நடைபெறும் போது தற்காலிக மின் இணைப்பு வழங்கிய நிலையில், பின்னர் பணிகள் முடிந்த பிறகு சாதாரண மின் கட்டணம் செலுத்தும் முறைக்கு மின் இணைப்பை மாற்ற வேண்டும். ஆனால் இதை செய்ய சம்பந்தப்பட்டவர் விண்ணப்பம் கொடுத்து பல மாதங்கள் ஆனாலும் செய்வதில்லை. இதனால் கட்டுமானப் பணிக்கான கட்டணத்தை (சாதாரண கட்டணத்தைவிட பல மடங்கு அதிகம்) பல மாதங்கள் செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதுபோல் வீட்டில் இருந்து மின் கம்பத்திற்கு செல்லும் வயர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கும் கூடுதல் தொகை நிர்ணயம் செய்து வசூலிக்கின்றனர்.

பாதிக்கப்பட்டவர்கள் கூறியதாவது: காளையார்கோவில் துணை மின் நிலைய கட்டுப்பாட்டில் உள்ள அலுவலகங்களில் பணிபுரியும் மின் வாரிய ஊழியர்கள் ஒவ்வொன்றிற்கும் லஞ்சம் நிர்ணயம் செய்து வசூலிப்பது குறித்து மின் வாரிய உயர் அலுவலர்களுக்கு தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. ஆண்டுக்கணக்கில் இதுபோல் குற்றச்சாட்டு இருந்தும் உயர் அலுவலர்கள் கண்டுகொள்ளாமல் இருப்பதால் தொடர்ந்து துணிச்சலாக லஞ்சம் கேட்டு வருகின்றனர். சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories: