ராமநாதபுரம்-பரமக்குடி சாலையில் விபத்து ஏற்படுத்தும் கால்நடைகள்

ராமநாதபுரம், பிப்.13: ராமநாதபுரம்-பரமக்குடி தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களில் அடிபட்டு கால்நடைகள் பலியாகி வருவது அதிகரித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் அச்சுந்தன்வயல், எட்டிவயல், சத்திரக்குடி, மஞ்சூர் உள்ளிட்ட பல கிராம பகுதிகளில் செம்மறி ஆடுகள், வெள்ளாடுகள், பசு மாடுகள் ஆகியவை தனியாக கொட்டகை அமைத்து வியாபார ரீதியாக வளர்க்கப்பட்டு வருகின்றன. காலையில் அவைகளை வெளியில் விடும் கால்நடைகளின் உரிமையாளர்கள் பின்னர் அதைபற்றி கண்டுகொள்வதே கிடையாது. கால்நடைகளை வாங்குவதற்காக வியாபாரிகள் வரும் நேரங்களில் மட்டும் தங்களுடைய கால்நடைகளை தேடிப் பிடித்து விற்பனை செய்கின்றனர். பகல் நேரங்களில் வெளியில் விடப்படும் இந்த கால்நடைகள் தேசிய நெடுஞ்சாலையில் சுற்றி திரிகின்றன. இரவு நேரங்களில் தேசிய நெடுஞ்சாலைகளின் ஓரங்களிலேயே தங்கி விடுகின்றன. இதனால் சமீப காலமாக வாகனங்களில் செல்பவர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து செய்திகள் வெளிவந்தும் கால்நடைகள் உரிமையாளர்கள் கண்டுகொள்ளாததால் சாலைகளில் திரியும் கால்நடைகளின் எண்ணிக்கை இதுவரை குறையவில்லை. சாலைகளில் செல்லும் நான்கு சக்கர வாகனங்களின் ஓட்டுநர்கள் சாலையில் திரியும் கால்நடைகள் மீது மோதி விடக்கூடாது என்பதற்காக வாகனங்களை வளைத்து ஒடித்து செல்ல வேண்டியுள்ளது. இந்த சமயங்களில் எதிரே வரும் இருசக்கர வாகன ஓட்டுநர்கள் பெரிய வாகனங்கள் எந்த வழியாக வளையும் என்று வழிதெரியாமல் விபத்துக்களை சந்திக்கின்றனர். இதனால் வாகன விபத்து ஏற்படும் நிலை உருவாகி வருகிறது.
சில சமயங்களில் வழியில்லாமல் கால்நடைகள்  மீது மோதி உயிர்பலியை ஏற்படுத்துகின்றனர். இதனால் பலமுறை தாங்கள் வளர்த்த கால்நடைகளை பொதுமக்கள் இழந்து வருகின்றனர். கடந்த 6 மாதத்தில் மட்டும் ராமநாதபுரம், பரமக்குடி தேசிய நெடுஞ்சாலையில் 25க்கும் மேற்பட்ட கால்நடைகள் இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற பிரச்னைகளை தடுக்க கால்நடைகளின் உரிமையாளர்கள் தாங்கள் வளர்க்கும் கால்நடைகளை சாலைகளில் சுற்றி திரிய விடாமல் இருக்க வேண்டுமென்று வாகன ஓட்டுநர்களும் கோரிக்கை விடுத்தனர். வாகன ஒட்டுநர் முத்துகுமார் கூறுகையில், கால்நடைகள் சாலையில் சுற்றி திரிவதால் கடும் அவதிக்குள்ளாகி வருகிறோம். வாகன சத்தத்தை கேட்டு கால்நடைகள் சாலையின் குறுக்கே ஓடிவருவதால் வாகனங்களில் மோதி பலியாகின்றன. கால்நடைகளின் உரிமையாளர்கள்தான் கால்நடைகளை சாலைக்கு வரவிடாமல் பாதுகாக்க வேண்டும் என்று கூறினார்.

× RELATED மாடுகள் கடத்துவதை தடுத்த டீக்கடை...