விருத்தகிரீஸ்வரர் கோயிலில் மாசிமக திருவிழா துவக்கம்

விருத்தாசலம், ஜன. 31: விருத்தாசலத்தில் பிரசித்திபெற்ற விருத்தகிரீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் வருடந்தோறும் மாசிமக உற்சவத்திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடுவது வழக்கம்.  இதனையொட்டி விருத்தகிரீஸ்வரர் கோயிலில் உள்ள ஆழத்து விநாயகருக்கு 10நாட்கள் நடைபெறும் விழாவிற்கு நேற்று காப்புக்கட்டி கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆழத்து விநாயகர், முருகன், வள்ளி தெய்வானை வீதியுலா தினமும் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து 9ம் நாள் திருவிழாவான வருகிற 7ம்தேதி தேர்திருவிழா நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து 10ம் நாள் திருவிழாவான 8ம் தேதி தீர்த்தவாரியுடன் ஆழத்து வினாயகர் திருவிழா முடிவடைகிறது. மாசிமக பிரம்மோற்சவ விழா வருகிற 10ம் தேதி விருத்தகிரீஸ்வரர் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் விழாவில் விருத்தகிரீஸ்வரர், விருத்தாம்பிகை உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளின் வீதியுலா நிகழ்ச்சிகள் தினந்தோறும் நடைபெறும்.

6ம் நாள் திருவிழாவான 15ம் தேதி விபச்சித்து முனிவருக்கு பழமலைநாதர் அருள்பாலிக்கும் ஐதீக திருவிழாவும், 9ம் நாள் திருவிழாவான பிப்ரவரி 18ம் தேதி அதிகாலை 5.15 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் பஞ்சமூர்த்திகளின் தேரோட்டம் நடைபெறுகிறது. இதில் விருத்தகிரீஸ்வரர், விருத்தாம்பிகை, விநாயகர், முருகன்,  சண்டிகேஸ்வரர் ஆகிய ஐவரும் தனித்தனி தேர்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார்கள். விழாவின் 10ம் நாள் மார்ச்  19ம் தேதி மாசிமக உற்சவம், 20ம் தேதி தெப்ப உற்சவமும், 21ம் தேதி சண்டிகேஸ்வரர் உபயத்துடனும் திருவிழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரேணுகாதேவி, செயல்  அலுவலர் ராஜாசரவணக்குமார், ஆய்வர் லட்சுமிநாராயணன் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

Related Stories: