பொதுப்பணித்துறையில் காலியாக உள்ள பொறியாளர் பதவிகளை நிரப்ப கோரி போராட்டம்

காரைக்கால், ஜன.22: காரைக்கால் பொதுப்பணித்துறையில் காலியாக உள்ள பொறியாளர் பதவிகளை, பதவி உயர்வின் மூலம் நிரப்ப வலியுறுத்தி, காரைக்காலில் பொதுப்பணித்துறை பொறியாளர்கள் நேற்று முதல் காலவரையற்ற விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.காரைக்கால் பொதுப்பணித்துறையில் காலியாக உள்ள தலைமை பொறியாளர், கண்காணிப்பு பொறியாளர், செயற் பொறியாளர், உதவி பொறியாளர், இளநிலை பொறியாளர் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பொறியாளர் பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்ப வேண்டும்.செயல்திறனுள்ள நேர்மறை எண்ணம் கொண்ட ஒரு அரசு செயலரிடம் பொதுப்பணித்துறை நிர்வாகத்தை ஒப்படைக்க வேண்டும். முறையான மாற்றல் கொள்கையை அமல்படுத்த வேண்டும். இளநிலை பொறியாளர் பதவிகளில், பணி செய்பவர்களை பதவி உயர்வின் மூலம் பணி செய்ய வழிவகை செய்ய வேண்டும். அனைத்து பதவிகளையும் பணிகட்டமைப்பு செய்ய வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைககளை வலியுறுத்தி, காரைக்கால் பொதுப்பணித்துறை பொறியாளர்கள் சங்கம் சார்பில் பொதுப்பணித்துறை பொறியாளர்கள் நேற்று முதல் காலவரையற்ற விடுப்பு எடுத்து, காரைக்கால் பொதுப்பணித்துறை அலுவலகம் வாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு, சங்க இணை செயலாளர் சிதம்பரநாதன் தலைமை வகித்தார். இணை பொருளாளர் கோபால்சாமி முன்னிலை வகித்தார்.போராட்டத்தை காரை பிரதேச அரசு ஊழியர் சம்மேளன கவுரவ தலைவர்கள் ஜார்ஜ், ஜெய்சிங், தலைவர் சுப்ரமணியன், பொதுச் செயலாளர் ஷேக் அலாவுதீன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். போராட்டத்தில் பொறியாளர்கள் சுப்ரமணியன், ஜீவா, நமச்சிவாயம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: