×

நூலகமாக மாற்ற கோரிக்கை

பரமக்குடி, ஜன. 18: பரமக்குடியில் செயல்பட்டு வந்த மாற்றுத்திறனாளிகள் பயிற்சி மையம் புதர்மண்டி செயல்படாமல் உள்ளது. நல்ல நிலையில் உள்ள இந்த கட்டிடத்தை வீணாக்காமல் நூலகமாக மாற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பரமக்குடி ஓட்டபாலம் பகுதியில் மதுரை-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சட்டமன்ற அலுவலகம் அருகில் மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான பயிற்சி மையம் கடந்த 2005ல் தொடங்கப்பட்டது. இதில் பரமக்குடி சுற்றுவட்டாரத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகையுடன் பயிற்சி மேற்கொண்டு வந்தனர். கடந்த 2008-09ம் ஆண்டில் ரூ.3 லட்சம் மதிப்பில் கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டது.இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக தொழில்பயிற்சி மையம் செயல்படாமல் பூட்டியே கிடக்கிறது. கட்டிடத்தின் முன் உள்ள காலி இடங்களில் செடி, கொடிகள் வளர்ந்தும், கருவேல மரங்கள் வளர்ந்தும் புதர்மண்டிய நிலையில் உள்ளது. இதனால் விஷ சந்துக்கள் வளர்ந்து சாலையில் முதுகுளத்தூர் செல்வதற்காக பேருந்திற்கு காத்திருக்கும் பயனிகளை அச்சுறுத்தி வருகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் சரிசெய்ய நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர்.பரமக்குடி பெருமாள்கோவில் பகுதியில் செயல்பட்டு வந்த அரசு நூலகம் தற்போது இடிந்து விழுந்ததால் இடமில்லாமல், புத்தகங்கள் அரசு ஆண்கள் பள்ளியில் குப்பைகளாக போட்டு வைக்கப்பட்டுள்ளன. புதர்மண்டி கிடக்கும் மாற்றுத்திறனாளிகள் தொழில்பயிற்சி மையத்தின் இரண்டு கட்டிடங்களை பொது நூலகமாக மாற்ற கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து ஓட்டப்பாலம் இளைஞர் விக்கி கூறுகையில், ‘இரண்டு வருடங்களாக பூட்டியே கிடப்பதால் புதர்மண்டி கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. நூலக கட்டிடம் இடிந்து புத்தகங்கள் அறையில் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் மற்றும் படித்த இளைஞர்கள் புத்தகம் வாசிக்க முடியாமல் அவதிக்குள்ளாகி வருகிறோம். ஆகையால் பயன்படாமல் உள்ள மாற்றுத்திறனாளிகள் கட்டிடத்தை தற்போது தற்காலிகமாக நூலகமாக மாற்ற கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.பாண்டி சமூக ஆர்வலர்: அரசு நூலகம் வாடகை கட்டிடத்தில் 25 வருடங்களாக இயங்கிவந்தது. இது மழையால் இடிந்து விழுந்துவிட்டது. நிதி ஒதுக்கப்பட்டும் நகராட்சி இடம் கொடுக்காததால் நூலக கட்டிடம் கட்டப்படாமல் உள்ளது.
தற்போது ஓட்டபாலத்தில் பயன்படாமல் பூட்டிகிடக்கும் அரசு மாற்றுத்திறனாளிகள் கட்டிடத்தை நூலகமாக மாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.


Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை