மதுபான தொழிற்சாலை ஊழியர்கள் போராட்டம்

விழுப்புரம், ஜன. 3:  விழுப்புரம் எல்லீஸ்சத்திரம் சாலையில் தனியார் மதுபான தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு விழுப்புரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 700 பெண்கள் மற்றும் 50 ஆண்கள் பணியாற்றி வருகின்றனர். 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் காலி பாட்டில்களை கழுவி சுத்தம் செய்தல், மதுபான வகைகளை பாட்டிலினுள் அடைத்தல், லேபிள் ஒட்டுதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளாக ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து தொழிற்சாலை உயர் அதிகாரிகளிடம் ஊழியர்கள் வலியுறுத்தி கேட்டும் ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.இதனால் ஆத்திரமடைந்த ஆண் ஊழியர்கள் நேற்று திடீரென தொழிற்சாலை வளாகத்தினுள் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் தாலுகா போலீசார் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கோரிக்கைகள் குறித்து தொழிற்சாலை அதிகாரிகளிடம் பேசி தீர்வு காண்பதாக கூறினர். அதன் பிறகு ஊழியர்கள் அனைவரும் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

Related Stories: