உரக்கடைகளில் வேளாண் அதிகாரிகள் ஆய்வு

திருக்கோவிலூர், டிச. 16: விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் வழங்கிய அறிவுரைகளின்படி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து உரம் மற்றும் பூச்சி மருந்து விநியோகம் மேற்கொள்ளும் சில்லரை தனியார் கடைகளில் ஆய்வு செய்ய வட்டாரம் வாரியாக வேளாண்மை உதவி இயக்குநர் தலைமையில் வேளாண்மை அலுவலர் மற்றும் முன்னோடி விவசாயி அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. சின்னசேலம் வேளாண்மை உதவி இயக்குநர் அன்பழகன், வேளாண்மை அலுவலர் ஆனந்தஜோதி, முன்னோடி விவசாயி சித்தாத்தூர் விஜயகுமாரி ஆகியோர் அடங்கிய குழு முகையூர் வட்டாரம் மணலூர்பேட்டை மற்றும் கண்டாச்சிபுரம் பகுதிகளில் உள்ள தனியார் பூச்சி மற்றும் உர விற்பனை கடைகளில் ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வின்போது பூச்சி மருந்து, உர உரிமங்கள் உரிய முறையில் புதுப்பிக்க பட்டதா என்றும் சில்லரை உர விற்பனை அனைத்தும் இயந்திரங்கள் மூலம் விற்பனை செய்வதை உறுதி செய்தனர். காலாவதியான பூச்சி மருந்துகள் விற்பனை மற்றும் இருப்பு விபரம், காலாவதியான பூச்சி மருந்து புதிய லேபில் ஒட்டி விற்பனை செய்வது, போலி உரங்கள் உற்பத்தி மற்றும் விற்பனை, அரசினால் அனுமதிக்கப்படாத கலப்பு உரங்கள் விற்பனை, விற்பனை விலை விளம்பர பலகை வைத்தல், மாதாந்திர அறிக்கை அனுப்புதல் போன்றவைகளை ஆய்வு செய்தது. ஆய்வின்போது முகையூர் வட்டார துணை வேளாண்மை அலுவலர் புகழேந்தி மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் வெங்கடகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: