சாலை விரிவாக்கப் பணியில் அதிகாரிகள் மெத்தனம் விபத்தில் பெண் பலியானதால் உறவினர்கள் திடீர் மறியல் போச்சம்பள்ளி-கல்லாவி சாலையில் பரபரப்பு

போச்சம்பள்ளி, டிச.12:  போச்சம்பள்ளி அருகே சாலை விரிவாக்கப்பணி மந்தகதியில் நடந்து வருவதால் அடிக்கடி விபத்துக்கள் நடக்கின்றன. லாரி மோதி பெண் ஒருவர் பலியானதால் ஆத்திரமடைந்த உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே மேட்டுசூளக்கரையை சேர்ந்தவர் புஷ்பராஜ் (30). கூலி தொழிலாளி. இவரது மனைவி இளமதி (28). சிப்காட்டில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் மாலையில், கணவன், மனைவி இருவரும் போச்சம்பள்ளிக்கு பைக்கில் சென்றனர். மீண்டும் அவர்கள் வீட்டிற்கு திரும்ப முடிவு செய்தனர். போச்சம்பள்ளி-கல்லாவி சாலையில் தற்போது விரிவாக்கப்பணி நடந்து வருகிறது. அங்குள்ள தனியார் பள்ளி அருகே பைக் வந்தபோது, செங்கல் லோடு ஏற்றி வந்த லாரி, அந்த பைக்கை முந்தி செல்ல முயன்றது. சாலையின் இருபுறமும் விரிவாக்கத்துக்காக பள்ளம் தோண்டப்பட்டிருந்ததால், பைக்கை ஓட்டி வந்த புஷ்பராஜ் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் தவறி விழுந்தார்.

  அப்போது, பின்னால் அமர்ந்திருந்த இளமதி சாலையில் விழுந்தார். அசுர வேகத்தில் வந்த செங்கல்லோடு லாரி இளமதி மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். தகவல் அறிந்து வந்த போச்சம்பள்ளி போலீசார் இளமதி உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்நிலையில், சாலை விரிவாக்கப் பணி மந்தகதியில் நடப்பதாலே விபத்துகள் ஏற்படுகிறது. அதனால் தான் இளமதியும் உயிரிழந்துள்ளார் என அவரது உறவினர்கள் 100க்கும் மேற்பட்டோர் போச்சம்பள்ளி-கல்லாவி சாலையில் நேற்று மாலை திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.  சாலை விரிவாக்க பணி டெண்டரை எடுத்துள்ள ஒப்பந்ததாரரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கோஷம் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். சாலை பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் மூலம் அறிவுறுத்தப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Related Stories: