குமார உடைப்பு வாய்க்கால் ஆக்கிரமிப்பு: அதிகாரிகள் ஆய்வு

சேத்தியாத்தோப்பு, டிச. 12: சேத்தியாத்தோப்பு வடக்கு மெயின் ரோட்டில் உள்ள குமார உடைப்பு வாய்க்கால்ஆக்கிரமிப்பை பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.சேத்தியாத்தோப்பு வடக்கு மெயின்ரோட்டில் குமாரஉடைப்பு வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்கால் சேத்தியாத்தோப்பு வெள்ளாற்று ராஜன் வடிகால் வாய்க்கால் தண்ணீரையும், மேற்கு பகுதியில் இருந்து வரும் பல்வேறு வாய்க்கால்களின் வடிகால் நீரை வெளியேற்றவும், பாசனத்திற்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தனிநபர் ஒருவர் இந்த வாய்க்கால் கரையை ஆக்கிரமித்து மாடி கட்டிடம் கட்டினார். நீர்வழி போக்குவரத்தை ஆக்கிரமித்துள்ள கட்டிடங்களை அகற்ற நீதிமன்றத்தில் பொதுமக்கள் சார்பில் முறையிடப்பட்டது.

இதன்படி இப்பகுதியில் உள்ள நீர்வழி போக்குவரத்து வாய்க்கால் கரையில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து ஆக்கிரமித்து கட்டியிருந்த மாடி வீடு, சமையலறை ஆகியவற்றை இடித்து தரைமட்டமாக்கினர். இந்நிலையில் மீண்டும் சம்பந்தப்பட்ட நபரே ஆக்கிரமிப்பு செய்து கழிவறையாக பயன்படுத்தி வந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் சேத்தியாத்தோப்பு பொதுப்பணித்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது மீண்டும் வடிகால் வாய்க்கால் கரை பகுதி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருப்பதை உறுதி செய்தனர். உடன் ஆக்கிரமிப்பை அகற்ற சம்பந்தப்பட்டவருக்கு அதிகாரிகள் உத்தரவிட்டனர். இல்லையெனில் நடவடிக்ைக எடுக்கப்படும் என்று எச்சரித்து சென்றனர்.

Related Stories: