திருத்தளிநாதர் கோயிலில் 108 சங்காபிஷேக விழா

திருப்புத்தூர், டிச.4:  திருப்புத்தூர் ஆதி திருத்தளிநாதர் கோயிலில் நேற்று கார்த்திகை மாதம் சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேக விழா நடைபெற்றது. திருப்புத்தூர் ஆதி திருத்தளிநாதர் கோயிலில் கார்த்திகை மாதம் சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேக விழா நடைபெற்று வருகிறது. இதையொட்டு நேற்று மாலை நெல்லில் சங்குகள் அடுக்கப்பட்டு பால் மற்றும் சந்தனம், குங்குமம் இடப்பட்டு ரோஜா பூக்களுடன் சுற்றிலும் நெய்தீபம் ஏற்றி சிவலிங்க வடிவத்தில் அமைக்கப்பட்டது. சிவாச்சாரியார்களால் சங்குகளுக்கு வில்வ இலை கொண்டு சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு கலசங்களுக்கு யாகவேள்வி பூர்ணாகுதி நடைபெற்று மூலவரான சிவனுக்கு பால், தயிர், சந்தனம், திருமஞ்சனம், இளநீர், விபூதி, யாகத்தில் வைக்கப்பட்ட புனித கலசநீர் ஆகிய பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் மூலவர் காட்சியளித்தார். இவ்விழாவில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு நெய் விளக்கேற்றி வழிபட்டனர்.  

Related Stories: