சாலையின் நடுவே மின்கம்பம்

விழுப்புரம், நவ. 29: விழுப்புரத்தில் சாலையின் நடுவே உள்ள மின்கம்பத்தை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். விழுப்புரம் சாலாமேடு அரசு போக்குவரத்துக்கழக தலைமை அலுவலகம் அருகே குடியிருப்புகளுக்கு சாலை செல்கிறது. போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் வீட்டு வசதிவாரிய வீட்டு மனைகள் உள்ள பகுதிகளுக்கு செல்லக்கூடிய இச்சாலையின் முன்புறம் சிலர் ஆக்கிரமிப்பு செய்து கடைகளை கட்டியிருந்தனர். பின்னர் ஆட்சியர் உத்தரவுப்படி வருவாய்த்துறையினர் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடித்து அகற்றினர். இதனிடையே இந்த சாலையின் முன்புறம் உள்ள வளைவின்  நடுப்பகுதியில் மின்கம்பம் அமைந்துள்ளது. இதனால் லாரி போன்ற வாகனங்கள் செல்ல முடியாமலும், பேருந்துகள் செல்ல முடியாமலும் உள்ளன.

இரவு நேரங்களில் பைக்கில் செல்பவர்கள் விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது. சாலையின் நடுவே உள்ள இந்த மின்கம்பத்தை அகற்ற பொதுமக்கள் பலமுறை வலியுறுத்தியும் மின்வாரியம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது. எனவே விபத்துக்கள் ஏற்படும் வகையில் அமைந்துள்ள அந்த மின்கம்பத்தை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: