ரேஷன் கடையில் ஆட்சியர் திடீர் ஆய்வு

விழுப்புரம், நவ. 21: முறைகேடுகள் நடப்பதாக வந்த புகாரையடுத்து ஆட்சியர் சுப்ரமணியன் ரேஷன் கடையில் திடீர் ஆய்வு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. விழுப்புரம் அருகே உள்ள பஞ்சமாதேவி ரேஷன் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு சரியான முறையில் பொருட்கள் விநியோகம் செய்யாமல் இருப்பதாகவும், எடை குறைவாக பொருட்கள் வழங்கப்படுவதாகவும் ஆட்சியர் அலுவலகத்திற்கு புகார்கள் குவிந்தன. இது தொடர்பாக ஏற்கனவே மாவட்ட வழங்கல் அலுவலருக்கு அரசி, சர்க்கரை வழங்கப்படாதது குறித்தும் புகார்கள் சென்றன. இந்த நிலையில் ஆட்சியர் சுப்ரமணியன் கண்டமங்கலம் ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்த போது திடீரென பஞ்சமாதேவி கிராமத்தில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று ஆய்வு செய்தார். பொது விநியோக திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்கள் குறித்தும், குடும்ப அட்டைதாரர்கள் மாதந்தோறும் பொது விநியோகத்திட்ட பொருட்களை வாங்கி பயன்படுத்துவது குறித்தும் ஆய்வு செய்தார். மேலும் ரேஷன் கடையில் பொருட்களின் இருப்பு குறித்தும், தரம் குறித்தும் ஆய்வு செய்தார்.

பதிவேடுகளை ஆய்வு செய்து சரிபார்த்ததோடு நியாயவிலைக்கடை, மின்னணு விற்பனை முனைய செயலி கருவியின் செயல்பாடுகள் குறித்தும், அக்கருவியில் குடும்ப அட்டைதாரர்கள் ஆதார் எண் பதிவு செய்யப்பட்டு வருவது குறித்தும் ஆய்வு செய்தார். பின்னர் இருப்பு புத்தகம், வருகை பதிவேடு, விலைப்பட்டியல், தகவல் பலகை உள்ளிட்டவைகளை ஆய்வு செய்த ஆட்சியர் அங்கிருந்த ஊழியர்களின் இருப்பு பற்றாக்குறை இருப்பதை அறிந்து விசாரணை நடத்தினார். இது தொடர்பாக துறை அதிகாரிகளிடமும் விளக்கம் கேட்டறிந்தார். தொடர்ந்து குடும்ப அட்டைதாரர்களிடம் அரசு வழங்குகிற இலவச அரிசி மற்றும் மலிவு விலையில் வழங்கப்படுகின்ற பருப்பு, பாமாயில், சர்க்கரை, கோதுமை, மண்ணெண்ணெய் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் தரமாக உள்ளதா என்றும், சரியான எடையில் கிடைக்கிறதா என்பதையும் கேட்டறிந்தார். அப்போது பொதுமக்கள் சிலர் எடை குறைவாக இருப்பதாகவும், பொருட்கள் ஒதுக்கீடு உங்களுக்கு குறைவு என்று காரணத்தை சொல்வதாகவும் கூறினர். இதனை கேட்ட ஆட்சியர் சுப்ரமணியன், வழங்கல் அலுவலர்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க அறிவுரை வழங்கினார். பின்னர் அருகில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு சென்ற ஆட்சியர், அங்கு மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரத்தை ஆய்வு செய்து அதனை சாப்பிட்டு பார்த்தார். ஆய்வின் போது துறை அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

Related Stories: