குத்தகைதாரர்களிடமிருந்து கோயில் நிலங்களை மீட்க வேண்டும்

சின்னசேலம், நவ. 20: அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில் நிலங்களை குத்தகைதாரர்களிடமிருந்து மீட்க வேண்டும் என்று கலெக்டருக்கு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் தாலுகாவில் அறநிலையத்துறைக்கு சொந்தமாக பல கோயில்கள் உள்ளது. குறிப்பாக சின்னசேலத்தில் சிவன் கோயில், தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் கோயில், கச்சிராயபாளையத்தில் வரதராஜ பெருமாள் கோயில், வடக்கநந்தலில் சிவன் கோயில் உள்ளிட்ட ஏராளமான கோயில்கள் உள்ளது. இந்த கோயில் ஒவ்வொன்றிற்கும் 10 முதல் 15 ஏக்கர் வரை நிலங்கள் உள்ளது.

இந்த நிலங்களில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்புவரை ஊர் முக்கியஸ்தர் விவசாயம் செய்து வந்தார். காலப்போக்கில் அரசியல் குறுக்கீடால் ஆளுங்கட்சிக்காரர்களே கோயில் நிலத்தை பங்கு போட்டு விவசாயம் செய்து வருகின்றனர். கோயில் நிலத்தை முறையாக விவசாயம் செய்யும் நபர்கள் கோயில் நிலத்திற்குரிய குத்தகையை முறையாக செலுத்துவது இல்லை. சிலர் பாக்கி வைத்துள்ளனர். சிலர் சரியாகவும், சிலர் குறைவாகவும் தருகின்றனர். சிலர் எதுவுமே தருவதில்லை. ஆனால் இதையெல்லாம் கண்காணிக்க வேண்டிய அறநிலையத்துறை அதிகாரிகள் சரியாக நிர்வாகம் செய்வதில்லை. இதனால் கோயில் வருமானம் முறையாக வசூலிக்கப்படாமல் இருப்பதால் கோயில்கள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை.

கோயில் பூசாரிக்குக்கூட சம்பளம் வழங்க முடியாமல் சில கோயில்கள் பூட்டப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக கச்சிராயபாளையம் வரதராஜ பெருமாள் கோயிலுக்கு இதேநிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த கோயில் நிலங்கள் முறையாக ஏலம் விடுவதில்லை. அதனால் ஒரே நபரே தொடர்ந்து விவசாயம் செய்து வருகின்றனர். ஆகையால் மாவட்ட கலெக்டர் சின்னசேலம் தாலுகாவில் உள்ள கோயில் நிலங்களை கணக்கெடுத்து, அதன் வருமானம், ஒரே நபரிடம் தொடர்ந்து குத்தகைக்கு விடப்பட்டுள்ளதா என்பதை விசாரணை நடத்தி கோயில் நிலங்களை மீட்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Related Stories: