லாபநோக்கோடு பணி செய்யக்கூடாது

விழுப்புரம், நவ. 16: காவல் நிலையங்களில் அதிகளவில் வரவேற்பாளர் பணியில் பெண் காவலர்கள் உள்ளனர். இந்த பணியில் உள்ளோர் லாப நோக்கத்தோடு பணி செய்யக்கூடாது என எஸ்பி ஜெயக்குமார் அறிவுறுத்தினார். விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் காவல் நிலையங்களில் நியமிக்கப்பட்டுள்ள வரவேற்பாளர்களுக்கான புத்தாக்க பயிற்சி முகாம் விழுப்புரம் காவலர் சமுதாய கூடத்தில் நேற்று தொடங்கியது. இரு நாட்கள் நடைபெறும் இந்த புத்தாக்க பயிற்சியை விழுப்புரம் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில்,  காவல் நிலையங்களில் வரவேற்பாளர் பணி பல ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்டது. வரவேற்பாளர் பணி என்பது கனிவாக இருக்க வேண்டும்.

ஒரு தொழில் சார்ந்த நிறுவனம் வெற்றி பெறுவதில் முக்கிய பங்கு வரவேற்பாளரிடமே உள்ளது. பெண்களின் அணுகுமுறை ஆண்களை விட மென்மையாக இருக்கும் என்பதாலே, காவல் நிலையங்களில் அதிகளவில் வரவேற்பாளர் பணியில் பெண் காவலர்கள் உள்ளனர். இந்த பணியில் உள்ளோர் லாப நோக்கத்தோடு பணி செய்யக்கூடாது. காவல் நிலையங்களை நாடி வருவோர், பிரச்னைகளை யாரிடம் கூறுவதென தெரியாமல் கூட வரலாம். அவர்களை கனிவோடு வரவேற்று பிரச்னை தெரிந்து கொண்டு யாரை அணுக வேண்டும், புகார் எழுதும் முறைகளை வரவேற்பாளர் தான் கூற

வேண்டும்.

காவல் நிலையத்திற்கும், பொதுமக்களுக்கும் நீங்கள் ஒரு பாலமாக இருக்க வேண்டும். இவ்வாறு எஸ்பி பேசினார். பயிற்சியில் விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 120 பேர் கலந்து கொண்டுள்ளனர். இவர்களுக்கு சட்டம் அணுகுமுறை, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தல், கணினியில் வழக்கு பதிவேற்றம் முறை, சிசிடிவி கண்காணித்தல், மக்களை அணுகும் முறை ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆயுதப்படை டிஎஸ்பி சங்கரன், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு டிஎஸ்பி முத்துமாணிக்கம், கள்ளக்குறிச்சி டிஎஸ்பி ராமநாதன் ஆகியோர் பயிற்சி அளிக்கின்றனர்.

Related Stories: