×

கிருதுமால் நதி ஒரு மாதத்தில் முழுமையாக சுத்தம் செய்யப்படும் ஐகோர்ட் கிளையில் அரசு தகவல்

மதுரை, நவ. 16: கிருதுமால் நதி ஒரு மாதத்திற்குள் முழுமையாக சுத்தம் செய்யப்படும் என ஐகோர்ட் கிளையில் தெரிவிக்கப்பட்டது. மதுரை, சிந்தாமணியை சேர்ந்த கார்த்திக், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
கிருதுமால் நதி மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் வழியாக 83 கிமீ தூரம் பாய்ந்து குண்டாற்றில் கலக்கிறது. துவரிமான் பகுதியில் இருந்து நதியில் அதிகளவு சாக்கடை கலக்கிறது. மதுரையில் ஏற்குடி அச்சம்பத்து, பொன்மேனி, சுப்ரமணியபுரம், எல்லீஸ் நகர், திடீர் நகர், மாகாளிப்பட்டி, கீரைத்துரை, சாமநத்தம் ஆகிய பகுதிகளில் 13 கி.மீ. தூரத்திற்கு செல்கிறது. இந்த நதி கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் சுத்தம் செய்யப்பட்டது. ஆனால், அதிகளவு குப்பைகளும், கழிவுநீரும் கலப்பதால் சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.

எனவே, கிருதுமால் நதியை சுத்தம் செய்யவும், தூய்மையாக பராமரிக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், கிருதுமால் நதி சுத்தம் செய்யும் பணியும், ஆக்கிரமிப்பு அகற்றும் பணியும் துவங்கி நடந்து வருகிறது. இன்னும் ஒரு மாதத்தில் பணிகள் முழுமையாக முடியும் என கூறப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் மனுவை முடித்து வைத்தனர்.

Tags : Kruthumal River ,
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை