பெண்ணிடம் செயின் பறிப்பு போலி போலீஸ் கைவரிசை

ஈரோடு, நவ. 15:  ஈரோட்டில் போலீஸ் போல் நடித்து பெண்ணிடம் ஏழு பவுன் செயினை மர்மநபர்கள் பறித்து சென்றனர்.

ஈரோடு இடையன்காட்டு வலசு சின்னமுத்து 3வது வீதியை சேர்ந்த சுப்பிரமணி. இவர் தனியார் நிறுவனத்தில் கூலி தொழிலாளி. இவரது மனைவி நீலா(45).  இவர் நேற்று காலை வீரப்பன் சத்திரத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு வீட்டிற்கு பாரதி தியேட்டர் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது இவரை பின்தொடர்ந்து டூவீலரில் வந்த இரண்டு மர்மநபர்கள், நீலாவை தடுத்து நிறுத்தினர். அவர்கள் நீலாவிடம் தாங்கள் போலீஸ் எனவும், இந்த பகுதியில் பலரிடம் செயின் பறிப்பு சம்பங்கள் நடந்து வருகிறது எனவும். நீங்கள் கழுத்தில் செயின் அணிந்து செல்வது பாதுகாப்பு அல்ல என கூறியுள்ளனர்.

 எங்களிடம் உங்கள் செயினை கழட்டி தாருங்கள், பத்திரமாக பேப்பரில் சுற்றி தருகிறோம் என கூறினராம். இதை நம்பிய நீலா, 7பவுன் தாலி கொடியை கழட்டி மர்மநபர்களிடம் கொடுத்தார். பிறகு நீலாவின் கவனத்தை திசை திருப்பி, செயினை வைப்பது போல் வெறும் பேப்பரை பொட்டலமாக மடித்து நீலாவிடம் கொடுத்து விட்டு டூவீலரை திருப்பி செல்ல முற்பட்டனர். அவர்கள் மீது சந்தேகம் அடைந்த நீலா அந்த நபர்கள் கொடுத்த பேப்பர் பொட்டலத்தை பிரித்து பார்த்தார். அதில் செயின் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்து, அவர்களை பிடிக்க முற்பட்டார். ஆனால் அந்த மர்மநபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories: