தனியார் நிதி நிறுவன ஊழியர்களை தாக்கி பணம் பறித்த வழக்கில் வாலிபர் கைது

விக்கிரவாண்டி, நவ. 15:  விக்கிரவாண்டி அருகே ராதாபுரத்தில் கடந்த 3ம் தேதி வில்லியனூர் தனியார் நிதி நிறுவன ஊழியர்களான அதே ஊரை சேர்ந்த சம்பத்குமார்(36), மயிலம் கிராமத்தை சேர்ந்த செந்தமிழ் பாண்டியன் ஆகிய இருவரும் மகளிர் குழுவினரிடம் பணம் வசூல் செய்து கொண்டு, அங்கிருந்த ஒரு பிரியாணி கடையில் மதிய உணவு சாப்பிட்டனர். அப்போது முகமூடி அணிந்து பைக்கில் வந்த இருவர் கடைக்குள் புகுந்து கத்தியால் தாக்கி அவர்கள் வைத்திருந்த ரூ.2 லட்சத்து 32 ஆயிரத்து 700 மற்றும் மொபைல் டேப், பணம் வசூல் செய்யும் இயந்திரம் இருந்த பேக்கை பறித்து கொண்டு தப்பி சென்றனர். இது குறித்து சம்பத்குமார் விக்கிரவாண்டி போலீசில் புகார் கொடுத்தார். இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் பேரில், டிஎஸ்பி சங்கர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ஜோதி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகேசன், சரவணன் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், ராதாபுரம் பஸ் நிலையம் அருகே தனிப்படையினர் ரோந்து சென்ற போது அங்கு நின்றிருந்த ஒரு வாலிபரை சந்தேகத்தின் பேரில்  பிடித்து விசாரணை செய்தனர். இதில் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால் சந்தேகமடைந்த போலீசார், காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

இதில் ராதாபுரம் காலனியை சேர்ந்த தங்கராசு மகன் சுகுமார்(27) என்பது தெரிந்தது. மேலும் விசாரணையில், ராதாபுரத்தில் தனியார் நிறுவன ஊழியர்களிடம் கொள்ளையடித்ததை ஒப்புக் கொண்டார். ராதாபுரத்தை சேர்ந்த சிலம்பரசன் என்பவர் தீபாவளி செலவிற்காக தன்னிடம் பணம் கேட்டதாவும், அதற்கு இங்கு தனியார் பைனான்ஸ்காரர்கள் பணம் வசூல் செய்ய வருவார்கள். அவர்களிடமிருந்து கொள்ளையடித்தால் பணம் நிறைய கிடைக்கும் எனவும் சுகுமார் கூறியுள்ளார். இதையடுத்து சிலம்பரசன் கூட்டாளியான புதுவை காலப்பாட்டு பகுதியை சேர்ந்த சுகன் என்ற பிரதீப் மற்றும் ராதாபுரம் குறளரசன் ஆகிய நான்கு பேரும் கூட்டாக சேர்ந்து கொள்ளையடிக்க திட்டம் தீட்டினர். அதன்படி கடந்த 3ம் தேதி பைனான்ஸ்காரர்கள் வருவதை சுகுமார், தெரிவித்ததன் பேரில் சிலம்பரன் பைக்கை ஓட்ட சுகன் பின்னால் அமர்ந்து வந்து பிரியாணி கடையில் கத்தியால் தாக்கி பணத்தை பறித்து கொண்டு தப்பி சென்றுள்ளனர். பின்னர் அங்குள்ள ஏரி பகுதியில் நான்கு பேரும் பணத்தை பங்கு பிரித்து கொண்டு சென்றதாக சுகுமார் தெரிவித்ததாக போலீஸ் தரப்பில் தெரிவித்தனர்.

இதையடுத்து சுகுமாரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து ரூ.28 ஆயிரத்து 500 பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய சிலம்பரசன் மற்றும் சுகன் ஆகிய இருவரும் கடந்த 5ம் தேதி திருக்கனூரில் நடந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு காலாப்பட்டு சிறையில் உள்ளனர். ராதாபுரத்தை சேர்ந்த குறளரசன் போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: