சிகிச்சை பெற நோயாளிகள் முண்டியடித்ததால் பரபரப்பு

ரிஷிவந்தியம், நவ. 15:  ரிஷிவந்தியத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரிஷிவந்தியம், வெங்கலம், முட்டியம், பாசார், மண்டகபாடி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இங்கு சித்த மருத்துவ பிரிவும் உள்ளது. இங்கு பணியில் 4க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது வேகமாக டெங்கு உள்ளிட்ட விஷ காய்ச்சல்கள் பரவி வருவதால் ரிஷிவந்தியம் ஒன்றியம் முழுவதும் காலை நேரங்களில் டெங்கு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த டாக்டர்கள் செல்கின்றனர். இந்நிலையில் நேற்று காலை ரிஷிவந்தியம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தைகள் உட்பட பெரியவர்கள் வரை விஷ காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள் வெகுநேரமாக காத்திருந்தனர்.   அப்போது ஒரே மருத்துவர் மட்டும் புறநோயாளிகளுக்கு சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளித்து வந்ததால்,  பொதுமக்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால், அங்கு பரபரப்பு நிலவியது. இதுகுறித்து தகவல் அறிந்த ரிஷிவந்தியம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களை சமாதானம் செய்தனர். பின்னர் மருத்துவம் பார்க்கப்பட்டது. ஒரே ஒரு மருத்துவர் மட்டும் புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளித்ததால், தள்ளுமுள்ளு ஏற்பட்டதாகவும், புறநோயாளி பிரிவு பார்க்க கூடுதலாக மருத்துவரை நியமிக்க வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

Related Stories: