திருப்புத்தூரிலுள்ள மருதுபாண்டியர் நினைவிடத்தில் தென்மண்டல ஐஜி நேரில் ஆய்வு

திருப்புத்தூர், அக். 23:  திருப்புத்தூரில் நாளை (அக்.24)  நடைபெற உள்ள மருதுபாண்டியர் நினைவு நாளை முன்னிட்டு நினைவிடத்தை தென்மண்டல காவல்துறை இயக்குனர் சண்முக ராஜேஸ்வரன் ஆய்வு மேற்கொண்டார். திருப்புத்தூரில் சிவகங்கை சீமையை ஆண்ட மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் நினைவிடம் உள்ளது. 1801ம் ஆண்டு ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடி விடுதலை வேட்கைக்காக அவர்கள் உயிர்நீத்தனர். அவர்களின் நினைவிடத்தில் ஆண்டுதோறும் அரசு விழா நடத்துவது வழக்கம். நாளை மருதுபாண்டியர்களின் 217வது குருபூஜை விழா மற்றும் அரசு விழா நடைபெற உள்ளது.

இதற்கான ஏற்பாடுகளையும், பாதுகாப்புப் பணிகளையும் பார்வையிட நேற்று தென்மண்டல காவல்துறை இயக்குனர் சண்முகராஜேஸ்வரன் நினைவிடத்திற்கு வந்தார். பின்னர் மருதுபாண்டியர் வாரிசுதாரர்களிடம் குருபூஜை விழா பற்றியும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரனிடம் அரசு விழா குறித்தும் ஆலோசனை மேற்கொண்டனர். விழா நாளன்று போக்குவரத்து வழித்தடங்கள், பாதுகாப்புப் பணிகள், அரசியல் பிரமுகர்களுக்கான நேர ஓதுக்கீடு குறித்தும் அவர் உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது திருப்புத்தூர் வட்டாட்சியர் தங்கமணி, பேரூராட்சி செயல் அலுவலர் முருகன், டிஎஸ்பி அண்ணாத்துரை, இன்ஸ்பெக்டர்கள், கீதா, ரகு மற்றும் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் தங்கதுரை, வருவாய் ஆய்வாளர் பழனிக்குமார், கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன் மற்றும் மருதுபாண்டியர் வாரிசுதாரர் குழுத் தலைவர் ராமசாமி ஆகியோர் உடனிருந்தனர்.இதனைத் தொடர்ந்து பஸ்நிலையம் எதிரே உள்ள மருதுபாண்டியர் தூக்கிலிடப்பட்ட இடத்தில் உள்ள ஸ்தூபியையும் சண்முக ராஜேஸ்வரன்  பார்வையிட்டார்.

Related Stories: