ஹைவேவிஸ் மலைப்பகுதிகளில் தொடர்ந்து பெய்யும் மழையால் நிரம்பும் சண்முகாநதி அணை விவசாயிகள் மகிழ்ச்சி

உத்தமபாளையம், அக்.18: ராயப்பன்பட்டி சண்முகாநதி அணை தொடர்ந்து பெய்து வரும் மழையினால் நிரம்பும் நிலையில் உள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சின்னமனூர் மேற்குதொடர்ச்சி மலையடிவாரத்தின் அழகுமிக்க பகுதியாக உள்ள ஹைவேவிஸ், மேகமலை, மணலாறு உள்ளிட்ட பகுதிகளில் பெய்யக்கூடிய மழைநீரை விவசாயிகள் பயன்பெறவேண்டும் என்பதற்காக சண்முகாநதி அணை கட்டப்பட்டது. இந்த அணையின் உயரம் 52.5 அடியாக உள்ளது. மழை அதிக அளவில் பெய்யும்போது அணையின் நீர்மட்டம் கிடுகிடுவெனன உயரும். மழை அல்லாத காலங்களிலும் 25 அடிக்கும் குறையாமல் தண்ணீர் நிற்கும். எனவே, இதனை சுற்றுலாதலமாக மாற்றவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

படகு சவாரி விடுவதுடன், சிறுவர் பூங்கா, பொதுமக்களைக் கவரக்கூடிய அம்சங்களை கொண்டு வந்தால், சுருளி அருவிக்கு செல்லக்கூடியவர்கள் சண்முகாநதி அணைக்கும் வந்து செல்வார்கள் என்ற கோரிக்கை கிடப்பில் உள்ளது. இதனிடையே அணையின் நீர்மட்டம் தற்போது உயர்ந்து வருகிறது.

நேற்றைய நிலவரப்படி அணையின் மொத்த கொள்ளளவான 52.5 அடியில் 49.30 அடியாக உள்ளது. நேற்று மாலை நிலவரப்படி 50 அடியை எட்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். அணைக்கு 17 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில், உத்தமபாளையம் வருவாய் கோட்ட உதவி ஆட்சியர் வைத்திநாதன் அணையை ஆய்வு செய்தார்.

Related Stories: