மார்க்கையன்கோட்டை தடுப்பணையில் உற்சாக குளியல் போடும் பொதுமக்கள்

சின்னமனூர், மே 9: சின்னமனூர் அருகே மார்க்கையன்கோட்டையில் உள்ள முல்லைப் பெரியாறு தடுப்பணையில் வரும் தண்ணீரில், பொதுமக்கள் குடும்பம், குடும்பமாக குளித்து மகிழ்கின்றனர். தமிழகத்தில் வெயிலில் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கிடையே கடந்த 4ம் தேதி அக்னி நட்சத்திரம் துவங்கியதை அடுத்து வெயிலின் கொடூரம் மிகவும் உயர்ந்துள்ளது. இதனால் பலரும் கொடைக்கானல், ஹைவேவிஸ், ஊட்டி, வால்பாறை மற்றும் கேரளா உள்ளிட்ட மலைப்பகுதிகளை நோக்கி தங்கள் பயணத்தை தொடங்கி உள்ளனர். இதற்கிடையே தேனி மாவட்டத்தில் ஏழைகளின் சுற்றுலாத்தலமாக திகழும் ஹைவேவிஸ், மேகமலை, மணலாறு உள்ளிட்ட பகுதிகளுக்கும் அதிகளவு சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர். அதேபோல் முல்லைப் பெரியாறு ஆற்றுப்படுகையில் ஆங்காங்கே இருக்கும் தடுப்பணைகளிலும், பொதுமக்களின் கூட்டம் நாள்தோறும் அதிகரித்து வருகிறது.

அங்குள்ள மணற்படுகையிலும், நிழற்படுகையிலும் தென்னந்தோப்புகளிலும் குவியும் பொதுமக்கள் தண்ணீருக்குள் இறங்கி நீண்ட நேரம் குளித்தும் மகிழ்கின்றனர். அதேபோல் சின்னமனூர் அருகே மார்க்கையன்கோட்டை பேரூராட்சியில் உள்ள எல்லப்பட்டி முல்லைப் பெரியாற்றின் தடுப்பணை அளவில் பெரியதாக உள்ளது. இங்கு காலை 6 மணிக்கே பொதுமக்கள் குவியத்தொடங்குகின்றனர். குடும்பத்தினருடன் வரும் அவர்கள் மாலை 6 மணி வரை அங்கு தங்கியிருந்து தடுப்பணையில் உற்சாகமாக குளித்து மகிழ்கின்றனர். இவர்கள் தங்களுக்கான காலை, மதிய உணவுகள், குழந்தைகளுக்கான நொறுக்குத்தீனி வகைகள் உள்ளிட்டற்றுடன் ஒரு மிகப்ெ்பரிய சுற்றுலாவாக நினைத்து வந்து தடுப்பணையில் குளிக்கின்றனர். இதையடுத்து இப்பகுதியில் சின்னமனூர் போலீசார் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்கின்றனர்.

The post மார்க்கையன்கோட்டை தடுப்பணையில் உற்சாக குளியல் போடும் பொதுமக்கள் appeared first on Dinakaran.

Related Stories: