×

அடிக்கல்நாட்டி 8 வருசம் ஆச்சு... சாயல்குடியில் பஸ் டிப்போ விரைவில் அமைக்க வேண்டும் அமமுக வலியுறுத்தல்

சாயல்குடி, அக்.18: சாயல்குடியில் கிளை போக்குவரத்து பணிமனை  கட்டும் பணியை விரைவாக துவக்க வேண்டும் என அமமுக வலியுறுத்தி உள்ளது. அமமுக சாயல்குடி ஒன்றிய செயலாளர் பச்சகண்ணு கூறுகையில், ‘‘கடலாடி ஊராட்சி ஒன்றியத்தில் 60 ஊராட்சிகள் உள்ளன. இதில் சாயல்குடி போக்குவரத்து மிகுந்த நகராக விளங்குவதால் சுமார் 100க்கும் மேற்பட்ட கிராமமக்கள் பயனடைந்து வருகின்றனர். மாவட்டத்தின் கடைசி நகரமாக விளங்கும் இங்கு அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கும்,  அரசு அலுவலகங்கள், மருத்துவ சிகிச்சை பெற, மேல்நிலை கல்வி பயில போன்றவற்றிற்கு மாணவர்கள், பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர். இவர்களுக்கு தடையின்றி பஸ்கள் இயக்குவதற்காக கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சாயல்குடியில் கிளை பஸ் டிப்போ அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது.

கடந்த 2010ம் ஆண்டு திமுக ஆட்சியின் போது சாயல்குடி அரசு ஆரம்ப சுகாதார மையம் அருகிலுள்ள சுமார் 5 ஏக்கர் காலி இடத்தில் போக்குவரத்து பணிமனை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. அதன் பிறகு ஆட்சி மாறியது. திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில், 2012ம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது அப்போதைய போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நேரில் வந்து பஸ் டிப்போ அமைக்க ஆய்வு செய்தார். ஆய்வு செய்து 6 ஆண்டுகள் ஆன பின்பும்  முதற்கட்ட பணிகள்கூட இன்று வரை துவங்கவில்லை. இதனால் போதிய பஸ் வசதியின்றி சாயல்குடி பகுதியை சேர்ந்த சுமார் 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சாயல்குடியில் பஸ் டிப்போ அமைக்க வேண்டும்’’ என கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags : foundation ,
× RELATED கோடை வெயிலில் தவிக்கும்...