சாலையோர குப்பை குவியலால் தொற்றுநோய் பரவும் அபாயம்

திண்டிவனம், அக். 17: விழுப்புரம் மாவட்டத்திலேயே விழுப்புரம் நகரத்திற்கு அடுத்த படியாக திண்டிவனம் அதிக மக்கள் தொகை கொண்ட நகரமாக விளங்குகின்றது. திண்டிவனம் -செஞ்சி செல்லும் சாலையில் செஞ்சி பேருந்து நிறுத்தம் பகுதியில் மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டிக்கு அருகில் குப்பைகள் சாலையோரத்தில் கொட்டப்படுகின்றன. இப்பகுதியானது நகரில் அதிக மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியாக விளங்குகின்றது. மேலும் இப்பகுதியில் கோயில் அமைந்துள்ளது. எனவே, இங்கு கொட்டப்படும் குப்பைகள் காற்றில் பறந்து சுகாதார சீர்கேட்டை விளைவித்து வருகின்றது.

தற்போது மழைக்காலம் துவங்கியுள்ளதால் மழைநீரில் இந்த குப்பைகள் கலந்து துர்நாற்றம் வீசுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. அதேபோல் நகராட்சியில் அள்ளப்படும் குப்பைகள் லாரிகள் மூலம் எடுத்து செல்லும்போது வலையால் மூடப்படாமல் பாதுகாப்பற்ற முறையில் கொண்டு செல்லப்படுவதால் குப்பை காற்றில் பறந்து வீதிகளில் சிதறுகின்றது. பயன்படுத்தப்படாமல் ஆங்காங்கே குப்பைத்தொட்டிகள் கேட்பாராற்று கிடக்கின்றது. இதனை நகரின் முக்கிய வீதிகளில் வைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் பொதுமக்கள் மட்டுமின்றி சாலையோர உணவகங்கள், கோழி இறைச்சி, மீன் கடைகள் ஆகியவற்றின் கழிவுகள் சாலையில் கொட்டப்படுபவர்கள் மீது நகராட்சி நிர்வாகம் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: