×

பரமக்குடி உழவர்சந்தையில் சுகாதார சீர்கேடு காய்கறி வாங்க வரும் மக்கள் முகம்சுளிப்பு

பரமக்குடி, அக்.17: பரமக்குடி உழவர்சந்தையில் சுகாதார சீர்கேடு நிறைந்துள்ளதால் பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
பரமக்குடி உழவர் சந்தையில் சுற்றுப்பகுதி கிராமத்தை சேர்ந்த கிராம மக்கள் பலர் கடைகள் வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். நகரின் மத்திய பகுதியில் அமைந்துள்ளதால் தினமும் ஏராளமான பொதுமக்கள் இங்கு வந்து காய்கறிகள், பூக்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். நாளுக்கு நாள் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் காய்கறி கடைகளும் புதிது புதிதாக திறந்த வெளியில் அமைக்கப்பட்டு வருகிறது. இதுதவிர வளாகமும் முறையாக சுத்தம் செய்யப்படுவது இல்லை. பல இடங்களில் குப்பைகள் குவியலாக குவித்து வைக்கப்பட்டுள்ளன. வளாகத்தின் வடக்கு பகுதியில் உழவர் சந்தையை சுற்றியுள்ள கடைகளிலிருந்து கோழி கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனால் எப்போதும் உழவர் சந்தையில் துர்நாற்றம் வீசுகிறது. சம்மந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள், கடை உரிமையாளர்களின் நலன் கருதி உழவர் சந்தையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த கோரிக்கை விடுத்துள்ளனர். உழவர்சந்தையில் பொருட்கள் வாங்கும் குடும்பத்தலைவி ஜெயராணி கூறுகையில், ‘‘உழவர் சந்தையில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. மாவட்டத்தில் அதிக கடைகள் உள்ள உழவர்சந்தை பரமக்குடியில் தான் உள்ளது. இருப்பினும் போதிய அடிப்படை வசதிகள் இல்லை. சுற்றுப்புறங்களில் உள்ள கடைகளில் சேரும் குப்பைகளை பலர் உழவர்சந்தை பகுதியில் கொட்டுகின்றனர். இதனால் ஏற்படும் துர்நாற்றம் காரணமாக தொற்றும்நோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும்’’ என்று கூறினார்.

Tags : Paramakudi ,
× RELATED இந்தியா கூட்டணி வேட்பாளர் உறவினர் கார் உடைப்பு