காய்கறி சந்தையில் சுகாதாரக்கேடு கண்டித்து ஆலங்குளம் பேரூராட்சி முற்றுகை

ஆலங்குளம், அக்.10:  ஆலங்குளம் காய்கறி சந்தையில் ஏற்பட்டுள்ள சுகாதாரக்கேடை கண்டித்து பேரூராட்சி அலுவலகத்தை வியாபாரிகள் முற்றுகையிட்டனர்.

ஆலங்குளம்-நெட்டூர் ரோட்டில் பேரூராட்சிக்குச் சொந்தமான காய்கறி மார்க்கெட் உள்ளது. இங்கு சுமார் 150 கடைகள் உள்ளது. ஆலங்குளம் பகுதியில் விளையும் காய்கனிகள் பிற மாவட்டங்கள் மற்றும் கேரளா வியாபாரிகள் வந்து வாங்கி செல்வர்.  30 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் இந்த மார்க்கெட்  மூலம் ஆலங்குளம் பேரூராட்சிக்கு வருடத்திற்கு ரூ.20 லட்சம் வரை வருவாய் வருகிறது. இருப்பினும் குடிநீர் , சுகாதார வளாகம், மின் விளக்கு, வாறுகால் போன்ற  அடிப்படை வசதிகள் இதுவரை  செய்து கொடுக்கப்படவில்லை. இதுதொடர்பாக பலமுறை மனு கொடுத்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில் கடந்த சில தினங்களாக பருவமழை பெய்து வரும் நிலையில் மார்க்கெட்  கழிவுநீர் மற்றும் மழை நீருடன் வெளியேற வழியின்றி மார்க்கெட்டிற்குள் சேறும் சகதியுமாக உள்ளது. இதனால் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது.

இதையடுத்து நேற்று ஆலங்குளம் காமராஜர் காய்கனி வியாபாரிகள் சங்கத் தலைவர் சந்திரன், செயலர் செல்வராஜ் தலைமையில் வியாபாரிகள் பேரூராட்சி அலுவலகத்தை  முற்றுகையிட்டனர். அங்கு செயல்அலுவலர் இல்லாததால் அவரது உதவியாளரிடம் மனு அளித்தனர். இதுகுறித்து சங்கத் தலைவர் சந்திரன் கூறியது: பேரூராட்சிக்கு அதிக வருவாய் ஈட்டித் தரும் காய்கறி மார்க்கெட்டை பேரூராட்சி நிர்வாகம் உரிய முறையில் பராமரிக்கவில்லை. இது தொடர்பாக பலமுறை கோரிக்கை வைத்தும்  நடவடிக்கை இல்லை. இந்நிலை தொடர்ந்தால் வியாபாரிகள் தரப்பில் போராட்டம் நடத்தப்படும் என்றார்.

Related Stories: