மணல் தட்டுப்பாடு எதிரொலி மானிய வீடு கட்டும் பணி முடக்கம்

சின்னசேலம், செப். 26: சின்னசேலம் தாலுகாவில் மணல் தட்டுப்பாடு எதிரொலியாகவும், கோமுகி அணை பகுதியில் குவாரி அமைக்காததாலும் அரசு மானியத்தில் கட்டப்படும் வீடுகளின் வேலைகளை தொடர முடியாமல் பாதியிலேயே முடங்கி உள்ளது. இதற்கு தீர்வு காண மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயனாளிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.விழுப்புரம் மாவட்டத்திற்கு உட்பட்ட சின்னசேலம் தாலுகாவில் சின்னசேலம், வடக்கநந்தல் ஆகிய இரு பேரூராட்சிகள் உள்ளது. இந்த இரண்டு பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் சுமார் 1000 வீடுகள் கட்டும் பணி நடந்து வருகிறது. அதே போல சின்னசேலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 50 ஊராட்சி கிராமங்களிலும், கல்வராயன்மலையில் உள்ள 15 ஊராட்சி கிராமங்களிலும் சுமார் 1500க்கும் மேற்பட்ட தொகுப்பு வீடுகள் மற்றும் பசுமை வீடுகள் கட்டும் பணியும் நடந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் பல தனி நபர்களும் வீடுகளை கட்டி வருகின்றனர். ஆனால் கடந்த 6 மாதங்களாகவே கள்ளக்குறிச்சி, சின்னசேலம் தாலுகா பகுதியில் கடும் மணல் தட்டுப்பாடு உள்ளது. கடந்த 3 மாதங்களுக்கு முன் திருச்சி போன்ற ஊர்களில் உள்ள மணல் குவாரியில் இருந்து ஒரு லோடு மணல் ரூ20 ஆயிரம் என வாங்கி பயன்படுத்தி வந்தனர்.

இப்போது அப்படியும் மணல் கிடைப்பதில்லை. கச்சிராயபாளையம் கோமுகி ஆற்று பகுதியிலும் ஒரு மூட்டை மணல் ரூ.60 என வாங்கி அரசு வீடு கட்டும் பயனாளிகள் வீடு கட்டி வந்தனர். அதையும் வருவாய்த்துறை, காவல் துறையினர் தடுத்து நிறுத்தி, மணல் அள்ள அனுமதி மறுக்கின்றனர்.

அதேபோல அரசு வீடு கட்ட மாட்டு வண்டிகளில் மணல் அள்ளிக் கொள்ளலாம் என்று அதிகாரிகள் கூறினாலும் காவல் துறையினர் அதை தடுக்கின்றனர். மணல் அள்ள இப்படி பல தடைகள் இருப்பதால் அரசு மானிய வீடு கட்டும் பணிகள் அடியோடு முடங்கி விட்டது.

எனவே, அரசு மானிய திட்டத்தில் வீடு கட்டும் பயனாளிகள் பயன்பெறும் வகையில் மாவட்ட ஆட்சியர் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: