கள்ளக்குறிச்சி நகராட்சியில் கழிவறை காற்று போக்கி குழாயில் கொசு வலை அமைக்கும் பணி

கள்ளக்குறிச்சி, செப். 26: கள்ளக்குறிச்சி நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளது. இங்கு சுமார் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இங்குள்ள ஒவ்வொரு வீடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கழிவறை செப்டிக் டேங்க் பகுதியில் காற்று போக்கி குழாய் அமைக்கப்பட்டுள்ளது. செப்டிக் டேங்க்கில் உற்பத்தியாகும் கொசுக்கள் காற்று போக்கி குழாய் வழியாக வெளியேறி கொசு அதிகப்படியாக உற்பத்தியாகி டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய் ஏற்பட்டு பொதுமக்களுக்கு பெரிதும் பாதிப்பு ஏற்படுத்துகிறது. அதனை கட்டுப்படுத்தும் விதமாக வீடுகளில் அமைக்கப்பட்டுள்ள கழிவறை செப்டிங் டேங்க் காற்று போக்கி குழாய் மேல் பகுதியில் வலை அமைத்து கொசு வெளியேறாதபடி மூடிவைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தேக்கி வைக்கப்பட்டுள்ள தண்ணீர் சுத்தமாக உள்ளதா? என ஆய்வு செய்து டெங்கு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள ஆட்சியர் சுப்ரமணியன் உத்தரவிட்டார். அதன்படி கள்ளக்குறிச்சி நகராட்சி ஆணையர் (பொ) அருண் தலைமையில் கருணாபுரம் வார்டு 8 மற்றும் 9வது வார்டு பகுதியில் உள்ள வீடுகளை ஆய்வு செய்து கழிவறை செப்டிக் டேங்க் காற்று போக்கி குழாயின் மேல் பகுதியில் கொசுவலை அமைக்கும் பணியை ஆணையர் அருண் துவக்கி வைத்தார். முதல் கட்டமாக நகராட்சி பகுதியில் 8 ஆயிரம் வீடுகளுக்கு வழங்க கொசு புழு ஒழிப்பு பணியாளர்கள் கொசு வலை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வீடு மற்றும் தெரு பகுதியில் பிளாஸ்டிக் பேப்பரை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டனர். நாள் கணக்கில் தேக்கி வைக்கப்பட்டுள்ள தண்ணீரில் டெங்கு கொசு உற்பத்தியாகிறதா? என ஆய்வு செய்தனர். நாள்பட தேக்கி வைக்கப்பட்டுள்ள தண்ணீரில் கொசு உற்பத்தியாவது அறிந்தால் வீட்டு உரிமையாளரிடம் அதனால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கம் அளித்து எச்சரித்தனர். மேலும் கொசு உற்பத்தியாகும் விதமாக உள்ள பழைய டயர், பிளாஸ்டிக் டப்பா, தேங்காய் மூடி உள்ளிட்டவற்றை உடனே அகற்ற வலியுறுத்தினர். அப்போது நகராட்சி துப்புரவு ஆய்வாளர் செல்வகுமார், துப்புரவு மேற்பார்வையாளர் பாலா, கொசு புழு ஒழிப்பு மேற்பார்வையாளர் மகேஸ்வரி, தூய்மை இந்தியா திட்டம் பரப்புரையாளர் சோபா மற்றும் கொசு புழு ஒழிப்பு பணியாளர்கள் உடன் இருந்தனர்.  

Related Stories: