சின்னசேலம் தாலுகாவில் மழையால் செழித்து வளரும் மரவள்ளி, மஞ்சள் பயிர்

சின்னசேலம், செப். 25: சின்னசேலம் தாலுகாவில் விட்டுவிட்டு பெய்து வரும் சாரல் மழையால் ரூ.50 லட்சம் மதிப்புள்ள மரவள்ளி, மஞ்சள், கரும்பு, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் வறட்சியின் பிடியில் இருந்து தப்பி தற்போது செழித்து வளர்ந்து வருகிறது. சின்னசேலம் தாலுகாவிற்கு உட்பட்ட சின்னசேலம், கச்சிராயபாளையம், கல்வராயன்மலை உள்ளிட்ட கிராம பகுதிகளில் சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் மரவள்ளி பயிர் நட்டனர். இதில் பாதிக்குமேல் மானாவாரி பயிர் அதாவது மழையை நம்பியே இருந்தது. மரவள்ளி பயிர் வளர்ந்து இரு மாதங்களான நிலையில் பெய்ய வேண்டிய பருவ மழை பெய்யவில்லை. இதனால் தழைத்து வளர வேண்டிய மரவள்ளி செடிகள் காய்ந்துபோனது. அதைப்போல கோமுகி கூட்டுறவு சர்க்கரை ஆலையை சுற்றி உள்ள கிராமங்களில் இருந்து சுமார் 15,000 ஏக்கரில் கரும்பு அரவைக்கு விவசாயிகள் பதிவு செய்திருந்தனர். ஆனால் விவசாயிகள் பயிரிட்ட கரும்பு பயிரும் மழையின்மையால் காய்ந்துபோனது. குறிப்பாக இந்த ஆலையை சுற்றி உள்ள கச்சிராயபாளையம், வடக்கநந்தல், பரிகம், எடுத்தவாய்நத்தம், மண்மலை, பொட்டியம், மாயம்பாடி, கரடிசித்தூர் உள்ளிட்ட நீர்நிலை ஆதாரம் உள்ள கிராமங்களில் கரும்பு பயிர் ஓரளவு வளர்ந்து வருகிறது. ஆனால் சின்னசேலம் மற்றும் அதை சுற்றி உள்ள கிராமங்களில் கரும்பு வயல்கள் மழையின்மையின் காரணமாக வறட்சியால் வாடி வதங்கி சருகாகி வருகிறது. இதனால் நடப்பு கரும்பு அரவை பருவம் மற்றும் சிறப்பு கரும்பு அரவை பருவத்திற்கு போதுமான கரும்பு கிடைக்குமா என்பது கேள்விக்குறியாக இருந்தது. இதைப்போல மஞ்சள், மக்காச்சோளம் போன்ற பயிர்களும் மழையின்மையால் காய்ந்துபோனது. இதனால் விவசாயிகள் மிகுந்த சோகத்தில் இருந்தனர். இந்த நிலையில் கடந்த இரு வாரங்களாக சின்னசேலம் மற்றும் அதை சுற்றி உள்ள கிராமங்களிலும், கல்வராயன்மலை, கச்சிராயபாளையம் பகுதியிலும் விட்டுவிட்டு சாரல் மழை பெய்து வந்தது. இதனால் காய்ந்துபோன மரவள்ளி, மக்காச்சோள பயிர்கள் துளிர்விட்டு தழைத்து வளர்கிறது. அதைப்போல கரும்பு மற்றும் மஞ்சள் பயிர்களும் வறட்சியின்பிடியில் இருந்து மீண்டு செழித்து வளர்கிறது. சின்னசேலம் தாலுகாவில் மட்டும் வறட்சியால் வாடி வதங்கிய ரூ.50 லட்சம் மதிப்புள்ள மரவள்ளி, மஞ்சள் உள்ளிட்ட பயிர்கள் சாரல் மழையால் செழித்து வளர்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: