×

முதியோர் உதவித்தொகை திடீர் நிறுத்தம் திரும்ப கிடைக்குமா என எதிர்பார்ப்பு

பரமக்குடி, செப். 21: பரமக்குடி தாலுகா அலுவலகத்தில் முதியோர்களுக்கு கொடுக்கப்பட்டு வந்த உதவித்தொகை திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. உதவித்தொகை திரும்ப கிடைக்கும் என்ற எதிர்பார்பில் தாலுகா அலுவலகங்களில் முதியோர் காத்திருக்கும் அவலம் தொடர்கிறது. பரமக்குடி தாலுகா அலுவலகத்தில் பரமக்குடி, போகலூர். நயினார்கோவில் போன்ற ஒன்றியங்களில உள்ள சுமார் 600க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த முதியவர்கள், அரசின் முதியோர் உதவித்தொகையை பெற்றுவந்தனர். இதில் தகுதியில்லாதவர்கள் உதவித்தொகை பெற்று வருபவர்கள் பெயர் பட்டியல் கள ஆய்வு செய்யப்பட்டு, தகுதியில்லாதவர்கள் என கண்டறியப்பட்டு, மாவட்ட நிர்வாகம் நிதி உதவியை நிறுத்தியது. இதில், வருவாய் கிராமங்களில் 5க்கும் மேற்பட்ட தகுதியானவர்களை கிராம அதிகாரிகள் முறையாக கள ஆய்வு செய்யாமல் பெயர் நீக்கப்பட்டியலில் நீக்கிவிட்டனர். இதனால், பலர் தங்களின் பெயர்களை முதியோர் உதவித்தொகை பட்டியலில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என தாலுகா அதிகாரிகளிடம் பலமுறை மனுகொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. கலெக்டர், மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு புகார் கொடுத்தும் பெயர் சேர்க்கவில்லை. வயதான காலத்தில் பசியும் பட்டினியுமாக காலைமுதல் மாலை வரை தாலுகா அலுவலக வாசலில் காத்துக்கிடக்கின்றனர்.

இதுகுறித்து பரமக்குடி பழனியம்மாள் கூறுகையில், ‘வருவாய்த்துறையினர் பெயர் பட்டியலை சரிபார்க்கும்போது தங்களின் உறவினர்கள், தெரிந்தவர்கள் மற்றும் சிலரிடம் பணத்தை வாங்கிக்கொண்டு பட்டியலில் சேர்த்து விட்டனர். வி.ஏ.ஓ., ஆர்,ஜ.,கள் தகுதியில்லாவர்களை விட்டுவிட்டு, தகுதியானவர்களை நீக்கிவிட்டனர். எனக்கு 70 வயதாகிறது. 100 ரூபாய் முதல் உதவித்தொகை வாங்கி வருகிறேன். எனக்கே தகுதியில்லையென ரத்து செய்துவிட்டனர். கலெக்டருக்கு மனுக் கொடுத்துள்ளேன். தாலுகா அலுவலகத்திலும் மனு கொடுத்துள்ளேன் இதுவரையிலும் மீண்டும் உதவித்தொகை கிடைக்கவில்லை. அந்த பணத்தை பெற்று கொண்டுதான் பக்கத்து வீட்டுக்காரர்கள் சாப்பாடு போடுகின்றனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மீண்டும் உதவித்தொகை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்’ என்றார்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை